வடக்கு, கிழக்கு மக்கள் எமது ஜனாதிபதியை நம்புகின்றார்கள், வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் உங்களின் பிரச்சினைகளை பேசுவது கிடையாது - அமைச்சர் மஹிந்தானந்தா - News View

Breaking

Post Top Ad

Friday, April 2, 2021

வடக்கு, கிழக்கு மக்கள் எமது ஜனாதிபதியை நம்புகின்றார்கள், வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் உங்களின் பிரச்சினைகளை பேசுவது கிடையாது - அமைச்சர் மஹிந்தானந்தா

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வடக்கு கிழக்கு மக்கள் எமது ஜனாதிபதியை நம்புகின்றார்கள் அதனால் அரசாங்கத்தினை நம்பி எமது கட்சியூடாகவும், கட்சிக்கு ஆதரவாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பியுள்ளனர். என விவசாய அமைச்சர் மஹிந்தானந்தா அளுத்கமகே தெரிவித்தார்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கக்கரி செய்கை விவசாயிகள் சந்திப்பும், உதவி வழங்கும் நிகழ்வும் நேற்று வெள்ளிக்கிழமை மாங்கேணியில் இடம்பெற்ற போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் மட்டக்களப்புக்கு வருகை தருவதாக ஜனாதிபதியுடன் பேசிய போது மக்களின் பிரச்சனை கேட்டறிந்து என்னிடம் சொல்லுங்கள் என்றார். வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு வேறு கட்சிகளின் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்துள்ளனர். அவர்கள் உங்களுடைய பிரச்சினைகளை பற்றி பேசுவது கிடையாது. அவர்களுடைய வியாபாரத்தினை மாத்திரம் பேசுகின்றனர்.

இவர்கள் மக்களின் பிரச்சனைகளை பேசாது வேறு பிரச்சனைகளை பேசுவதால் வெளிநாடுகளில் இருந்து பணம் வருகின்றது. நீங்கள் கஷ்டமாக இருந்தால் மாத்திரம் அவர்களுக்கு சந்தோசம். உங்களுக்கு உதவி கிடைத்தால் அவர்களுக்கு பிரச்சனை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வந்தபோது எல்லாரும் சொல்லியது தமிழ் மக்களின் கதை முடிந்து என்று ஆனால் அவர் வந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ளது. ஜனாதிபதி வந்ததன் பிற்பாடுதான் உங்களுக்கு பல்வேறு உதவிகள் கிடைத்துள்ளது என்றார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்தரகாந்தன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திருமதி.கலாமதி பத்மராஜா, விவசாய நவீன மயமாக்கல் செயற்றிட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஆர்.ஆர்.ஏ. குகான் விஜயகோன், கிழக்கு மாகாண பணிப்பாளர் பி.எம்.என்.தயாரட்ன, நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் திருமதி.ராதிகா ரவி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், வாகரை பிரதேச செயலாளர் எஸ்.கரன், வாகரை பிரதேச சபை தவிசாளர் எஸ்.கணேசன் உட்பட திணைக்கள அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஐந்து கக்கரி செய்கை விவசாயிகள் சங்கத்திற்கு நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டதுடன், கக்கரி செய்கை விவசாயிகள் சங்கத்தினால் அமைச்சருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் முதல் கட்டமாக உழவு இயந்திரங்களை வழங்குவதாகவும், ஏனைய பிரச்சனைகளை தீர்ப்பதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்தா அளுத்கமகே வாக்குறுதி வழங்கினார். அத்தோடு மாங்கேணி கக்கரி பதனிடும் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் ஐந்நூறு ஏக்கரில் ஐநூறு விவசாயிகள் கக்கரி செய்யை செய்துள்ளதுடன், இவர்களுக்கு நீர் பாய்ச்சும்; இயந்திரம், தூவல் நீர்ப்பாசனம், மரக்கறி சேகரிக்கும் கூடைகள், குழாய் கிணறு பொறுத்தும் குழாய்கள் என்பன 172 மில்லியன் ரூபாய் செலவில் வழங்கி வைக்கப்பட்டதுடன், பாதைகள் என்பன புனரமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கக்கரி செய்கை மூலம் பல வருமானங்கள் பெறும் நிலையில் விவசாயிகளின் நன்மை கருதி முன்கூட்டிய விலை நிர்யணம் மூலம் விற்பனை சிரரம் இல்லாமல் நிறுவனமே கொள்முதல் செய்யும் வகையில் வேலைத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad