இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் இராஜதந்திர ரீதியாகக் கையாளப்பட வேண்டியது என்கிறார் அமைச்சர் டக்ளஸ் - News View

Breaking

Post Top Ad

Monday, April 5, 2021

இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் இராஜதந்திர ரீதியாகக் கையாளப்பட வேண்டியது என்கிறார் அமைச்சர் டக்ளஸ்

இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் இராஜதந்திர ரீதியாகக் கையாளப்பட வேண்டியது என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு இருக்க வேண்டியது இரண்டு நாடுகளுக்கும் முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்றுமுன்தினம் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

'இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி அத்துமீறி சட்டவிரோதமான தொழில் முறைகளில் ஈடுபடுகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களின் செயற்பாடு கட்டுப்படத்தப்பட வேண்டும்.

எனினும் அதனை இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இராஜதந்திர ரீதியாக கையாள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது.

அதனால் குறித்த விவகாரத்தினை தீர்த்து வைப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம்.

அவை தொடர்பாக இரண்டு நாடுகளும் வெளிப்படைத் தன்மையுடன் பேச்சுக்களை முன்கொண்டு சென்று இரண்டு தரப்புக் கடற்றொழிலாளர்களும் திருப்தியடையும் வகையிலான தீர்வினை எட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது' என்றும் தெரிவித்தார்.

மேலும், எக்காரணத்திற்காகவும் இலங்கை கடற்றொழிலாளர்களையும் இலங்கையின் கடல் வளத்தினையும் பாதிக்கும் வகையிலான தொழில்முறைகளை பயன்படுத்த இந்தியக் கடற்றொழிலாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad