பெரும்பான்மைப்பலத்தை முறைகேடாக பயன்படுத்தக் கூடாது, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான மஹிந்த தெளிவுடன் செயற்பட வேண்டும் - கரு ஜயசூரிய - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 20, 2021

பெரும்பான்மைப்பலத்தை முறைகேடாக பயன்படுத்தக் கூடாது, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான மஹிந்த தெளிவுடன் செயற்பட வேண்டும் - கரு ஜயசூரிய

(நா.தனுஜா)

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலத்தை முறைகேடான விதத்தில் பயன்படுத்தி தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சட்டமூலங்கள் நிறைவேற்றப்படக் கூடாது என்று சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கிறது.

இது குறித்து கரு ஜயசூரிய அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார். 

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது சில சட்டமூலங்கள் தொடர்பில் வெகுவிரைவில் பாராளுமன்றத்தில் ஆராயப்படவுள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை முறைகேடான விதத்தில் பயன்படுத்தி தேசிய ரீதியில் மிகவும் முக்கியமான சட்டமூலங்கள் மற்றும் யோசனைகள் நிறைவேற்றப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் அதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் போதியளவு கால அவகாசத்தை வழங்குவது முக்கியமானதாகும்.

அதேபோன்று மறுபுறம் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதென்பது நீதித்துறையை குறைமதிப்பீடு செய்வதற்கு வழிவகுக்கும். 

இவற்றுக்கு மத்தியில் ஓர் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெளிவுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment