உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இரகசிய விசாரணைகள் அடங்கிய அறிக்கை இருந்தால் கையளியுங்கள் : பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இரகசிய விசாரணைகள் அடங்கிய அறிக்கை இருந்தால் கையளியுங்கள் : பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண

(செ.தேன்மொழி)

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இரகசிய விசாரணைகள் அடங்கிய அறிக்கை கிடைக்கப் பெற்றிருந்தால் அதனை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஒப்படைக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட இரகசிய விசாரணைகள் அடங்கிய அறிக்கையை, கத்தோலிக்க அருந்தையர்களிடம் சிலர் கையளித்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. 

கொழும்பில் அமைந்துள்ள தேவாலயமொன்றில் கடந்த திங்கட்கிழமை அந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வாறு ஏதேனும் அறிக்கைகள் வழங்கப்பட்டிருந்தால், அது விசாரணைக்கு மிகவும் பயனுடையதாக அமையும்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரும், பயங்கரவாத விசாரணை பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், இதுவரையில் 703 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் நீதிமன்றங்களினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கமைய சிலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் சிலர் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அருட்தந்தையர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் அறிக்கை கிடைக்கப் பெற்றால், அது விசாரணை அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு மேலும் பயனுடையதாக அமையும். தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ள சந்தர்ப்பத்தில் அந்த அறிக்கை விசாரணை அதிகாரிகளுக்கே கிடைக்கப் பெற வேண்டும். 

அதனால் கொழும்பு-10 இல் அமைந்துள்ள சமூகம், மத கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அந்த அறிக்கையை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கையளிக்க வேண்டும் என குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad