சிங்கராஜ வனத்தை அழித்துக் கொண்டு, கொழும்பில் மரக்கன்றுகளை நடுவது பயனல்ல - கட்சிபேதங்கள் இன்றி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்கிறார் ரணில் - News View

Breaking

Post Top Ad

Sunday, April 4, 2021

சிங்கராஜ வனத்தை அழித்துக் கொண்டு, கொழும்பில் மரக்கன்றுகளை நடுவது பயனல்ல - கட்சிபேதங்கள் இன்றி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்கிறார் ரணில்

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் வனப் பாதுகாப்பு சட்டத்திற்கு முரணாக சிங்கராஜ வனப் பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுக்கு நாட்டு மக்கள் அனைவரும் கட்சிபேதங்கள் இன்றி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். சிங்கராஜ வனத்தை பாதுகாக்க சர்வதேச மட்டத்திலான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நுகேகொடையில் ஞாயிறுக்கிழமை இளைஞர்களுடனான சந்திப்பின் போதே முன்னாள் பிரதமர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சிங்கராஜ வனப் பகுதியில் நீர்த் தேக்கமொன்றை உருவாக்கி அதனூடாக அம்பாந்தோட்டை பிரதேசத்துக்கு நீர் வழங்க அரசாங்கம் முயற்சிக்கிறது. இது வனப் பாதுகாப்பு சட்டத்துக்கு முரணானது. தற்போது நடைமுறையில் உள்ள வனப் பாதுகாப்பு சட்டத்திற்கு அமைய சிங்கராஜ வனத்தில் ஒரு மரத்தைகூட வெட்டுவது கூட சட்டவிரோத செயற்பாடாகும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து உலக நாடுகள் துரிதகர அபிவிருத்தி செயற்திட்டங்களை சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுத்துள்ளன. ஆனால் அரசாங்கம் வனப் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக செயற்படுகிறது. 

சிங்கராஜ வனம் இலங்கையின் பிரதான மழைக்காடாக காணப்படுகிறது. இயற்கை வளங்களை பாதுகாக்க முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன காலத்தில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

சிங்கராஜ வனத்தின் நிலப் பகுதிகள் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமிக்கப்படுகின்றன. சட்டவிரோத செயற்பாட்டை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

சிங்கராஜ வனத்தை அழித்துக் கொண்டிருக்கும் அதேவேளை கொழும்பில் மரக்கன்றுகளை நாட்டுவது பயனற்றது. சிங்கராஜ வனம் பாதிக்கப்பட்டால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

சிங்கராஜ வனத்தை பாதுகாக்க நாட்டு மக்கள் அனைவரும் அரசியல் கட்சி பேதங்களை துறந்து ஒன்றினைய வேண்டும். சட்டத்திற்கு முரணாக செயற்படும் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

சிங்கராஜ வனத்தை பாதுகாக்க சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தற்போது செயற்படுத்தியுள்ளோம்.

அரசாங்கம் மக்களாணைக்கு முரணாக செயற்படுகிறது. சீனி வரி குறைப்பு மோசடி, தரமற்ற எண்ணெய் விநியோகம் என பல குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளன.

சீனி வரி குறைப்பு மோசடி, தரமற்ற எண்ணெய் இறக்குமதி ஆகியவற்றின் உண்மை தன்மையினை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அரசாங்கத்தின் கருத்துக்கள் அனைத்தும் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளன.

துரித பொருளாதார முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சட்டவாட்சி கோட்பாடு ஆகிய துறைகள் குறித்து சிறந்த திட்டங்களை வகுத்துள்ளோம். கட்சியை பலப்படுத்தி ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற எமது கொள்கைகளை நாட்டு மக்களுக்கு இனிவரும் காலங்களில் அறிவிப்போம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad