தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் இந்தியாவுக்கு அனுப்பப்படும் - அறிவித்தது வெள்ளை மாளிகை - News View

About Us

About Us

Breaking

Monday, April 26, 2021

தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் இந்தியாவுக்கு அனுப்பப்படும் - அறிவித்தது வெள்ளை மாளிகை

தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தினசரி நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு 3.5 லட்சத்தை நெருங்கிவிட்டது. ஒக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவத்துறை திணறி வருகிறது.

நோயாளிகளை அனுமதிக்க இடம்கூட இல்லாமல் பல மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. கொரோனா தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சில மாநிலங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தொடர்புகொண்டு பேசியபோது இந்த தகவலை தெரிவித்தார்.

இந்தியாவுக்கு அனுப்புவதற்காக கொரோனா சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள், பரிசோதனை கிட், வெண்டிலேட்டர், பிபிஇ கிட் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், அவசரநிலை அடிப்படையில் இந்தியாவுக்கு தேவையான ஒக்சிஜன் உற்பத்தி கருவிகளை ஏற்பாடு செய்யவும் வழிகளை கண்டறிந்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிராக போரிடும் இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம் என அதிபர் ஜோ பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிசும் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நியூயார்க்கில் இருந்து முதல் கட்டமாக 5 டன் ஒக்சிஜன் வழங்கும் உபகரணங்கள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இது திங்கட்கிழமை மதியம் டெல்லியை வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment