வெளிநாட்டு விசாரணை குழுக்களையேனும் நாட்டுக்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் - ஜே.சி.அலவத்துவல - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 20, 2021

வெளிநாட்டு விசாரணை குழுக்களையேனும் நாட்டுக்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் - ஜே.சி.அலவத்துவல

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்கு இரு வாரங்களுக்குள் நீதியைப் பெற்றுக் கொடுப்பதாகக் கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. எனவே வெளிநாட்டு விசாரணை குழுக்களையேனும் நாட்டுக்கு அழைத்து இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் ஆற்ற வேண்டிய பொறுப்புக்கள் உள்ளன. தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்குவதாகக் கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது. தேசிய பாதுகாப்பு உள்ளிடவற்றை வலியுறுத்தியே 69 இலட்சம் மக்கள் வாக்களித்தனர்.

அதேபோன்று பாராளுமன்ற தேர்தலிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப் பெற்றது. எனவே தற்போதுள்ளதை விடவும் மிகத் துரிதமான முறையில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். பேராயர் உள்ளிட்ட முழு நாட்டு மக்களும் இதனையே எதிர்பார்க்கின்றனர்.

வெளிநாட்டு விசாரணை குழுக்களையேனும் நாட்டுக்கு அழைத்து இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். இதுபோன்றுதொரு சம்பவம் மீண்டுமொருமுறை இடம்பெறாமல் தடுக்க வேண்டுமெனில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

இந்த தாக்குதல்களுடன் சர்வதேச தொடர்புகளும் காணப்படலாம். இவை தொடர்பில் ஆராய்ந்து முறையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நாட்டு மக்களுக்கு அது பாதுகாப்பற்ற நிலைமை தோற்றுவிக்கும். 

அமெரிக்காவில் இது போன்றதொரு தாக்குதல் இடம்பெற்ற போது, ஆட்சி மாறிய போதும் தாக்குதலின் சூத்திரதாரிகள் சகலரும் கண்டு பிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர்.

இவ்வாறான நிலையில் பேராயர் உள்ளிட்ட இந்த தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு சகலருக்கும் காணப்படுகிறது. 

குறிப்பாக இது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகளால் யாருக்கும் திருப்தியடைய முடியாது என்றார்.

No comments:

Post a Comment