மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த காலங்களில் பேச வக்கில்லாத சிலர் இன்று மலையக பல்கலைக்கழகம் எங்கு என கேட்பதாக இ.தொ.கா. பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
லிந்துல - டயகம பிரதான வீதியின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர். '1000 ரூபா சம்பள விடயம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால் எம்மால் எதனையும் செய்ய முடியாது. மே 5 ஆம் திகதி தீர்ப்பு வந்த பின்னரே எம்மால் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும்.
இ.தொ.காவே சம்பள பிரச்சினையை நீதிமன்றம் கொண்டு சென்றதாக தற்போது சிலர் தூண்டி விடுகின்றனர். அதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அதாவது நீதிமன்றத்திற்கு சென்றதாவது 1000 ரூபாவை பெற்றுக் கொடுத்தது.
இ.தொ.காவின் வெற்றியாகும். நாம் இதை செய்யவில்லை. இ.தொ.கா சொன்னதை செய்தது அதாவது சம்பள நிர்ணய சபையின் ஊடாக 1000 ரூபா வழங்கப்பட்டுள்ளது.
கம்பனிகளே நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அது அவர்களின் உரிமையாகும். இது அடிப்படை உரிமை ஆனால் இதில் சிலர் அரசியல் இலாபம் தேடுகின்றனர். அதனை தவிர்ப்பது நல்லது எதிர்வரும் ஓரிரு மாதங்களில் இராத்தல் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கும். பாராளுமன்றத்தில் ஒருவர் பல்கலைக்கழகம் எங்கே என கேட்டார்.
கடந்த 5 வருடமாக 1000 ரூபாவை பற்றி பேச வக்கில்லாத, திராணி இல்லாதவர்கள் இப்போது பல்கலைக்கழகம் குறித்து பேசுகின்றனர் அதாவது 5 வருடங்களுக்கு முன்னர் சொன்ன பல்கலைக்கழகம் எங்கு என கேட்க திராணியில்லாதவர்கள் இப்போது பேசுகின்றனர். அரசாங்கம் நுவரெலியாவில் பல்கலைக்கழகம் அமைக்க கல்வியமைச்சின் கீழ் 300 - 400 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இதனை வரவு செலவு திட்ட அறிக்கையில் பார்க்கலாம்.
இப்போது 20 கிலோ 22 கிலோ இறாத்தல் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் சொல்லியே கம்பனிகள் இவ்வாறு இறாத்தலை கூட்டுவதாக சிலர் கூறுகின்றனர். வாங்கும் சந்தா பணத்துக்கு இவ்வாறு வரும் தொழிற்சங்க பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க வேண்டியது எனது கடமை. ஆகவே என் மீது கொண்டுள்ள அக்கறையை விடுத்து மக்களுக்காக கொழும்பில் இருந்து களத்துக்கு வந்து சேவை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment