இராணுவ உதவி நெறிமுறை தொடர்பான ஆவணங்களில் இலங்கை - சீனா கைச்சாத்து - News View

About Us

About Us

Breaking

Thursday, April 29, 2021

இராணுவ உதவி நெறிமுறை தொடர்பான ஆவணங்களில் இலங்கை - சீனா கைச்சாத்து

(எம்.மனோசித்ரா)

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்து இலங்கைக்கு சீனா ஆதரவளித்தமைக்கு பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன சீன பாதுகாப்பு அமைச்சரிடம் நன்றி தெரிவித்துடன், உயர்மட்ட சீன பாதுகாப்பு தூதுக்குழுவின் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஓர் அங்கமாக இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உதவி நெறிமுறை தொடர்பான ஆவணங்களிலும் கைச்சாத்திடப்பட்டன.

இலங்கைக்கு இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கினுடனான இரு தரப்பு கலந்துரையாடல் கொழும்பு ஷங்க்ரி-லா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதன்போதே ஜெனரல் கமல் குணரத்ன இதனைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஃபெங் தலைமையிலான சீன தூதுக்குழுவுடன் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்த கலந்துரையாடலில் இலங்கைக்கான சீன தூதுவர் கி சென்ஹோங், இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே மற்றும் முப்படை தளபதிகள் கலந்து கொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நீண்டகால இருதரப்பு உறவுகளை நினைவு கூர்ந்த ஜெனரல் கமல் குணரத்ன, பௌத்தம், வர்த்தகம், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் உலகளாவிய இணைப்பு உள்ளிட்ட பல வழிகளில் சீனா இலங்கையின் வரலாற்று ரீதியில் நட்பு நாடாக இருந்து வருகின்றது என்றார்.

மேலும், அண்மையில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் போது சீன அரசாங்கம் வழங்கிய ஆதரவுக்கு பாதுகாப்பு செயலாளர் இதன்போது நன்றி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் இராணுவ ரீதியிலான ஒத்துழைப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த ஜெனரல் ஃபெங், நடைமுறை சாத்தியமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கையுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை பாதுகாப்பு செயலாளர் மற்றும் இலங்கை சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகமும் மாணவர் சங்கத்தின் தலைவரும், ஸ்தாபக உறுப்பினருமான மேஜர் ஜெனரல் (ஓய்வு) விஜித ரவிப்பிரிய ஆகியோரின் அழைப்பின் பேரில் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஃபெங் மேற்படி இணையதளத்தை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

உயர்மட்ட சீன பாதுகாப்பு தூதுக்குழுவின் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒர் அங்கமாக இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உதவிகள் தொடர்பான ஆவணங்களிலும் கைச்சாத்திடப்பட்டன. மேலும் இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதிகள் மற்றும் சீன தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிவந்த ஜெனரல் ஃபெங் ஆகியோருக்கிடையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

No comments:

Post a Comment