கொவிட் வைரஸ் குறித்து அரசாங்கம் அலட்சியமாக செயற்பட்டதன் விளைவை நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ளார்கள் : சுகாதார பாதுகாப்பு கூட அரசியல் மட்டத்தில் தீர்மானிக்கப்படுவது அரசின் பலவீனத்தன்மையை வெளிப்படுத்துகிறது - விஜித ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 28, 2021

கொவிட் வைரஸ் குறித்து அரசாங்கம் அலட்சியமாக செயற்பட்டதன் விளைவை நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ளார்கள் : சுகாதார பாதுகாப்பு கூட அரசியல் மட்டத்தில் தீர்மானிக்கப்படுவது அரசின் பலவீனத்தன்மையை வெளிப்படுத்துகிறது - விஜித ஹேரத்

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டின் காரணமாகவே கொவிட்-19 வைரஸ் சடுதியாக அதிகரித்துள்ளது. பண்டிகை காலத்தில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை அரசாங்கம் கடுமையாக செயற்படுத்தியிருந்தால் பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட்டிருப்பார்கள். கொவிட் வைரஸ் குறித்து அரசாங்கம் அலட்சியமாக செயற்பட்டதன் விளைவை நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ளார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் தற்போதைய சுகாதார நிலைமை அபாயகரமானதாக காணப்படுகிறது. அயல் நாடான இந்தியாவை காட்டிலும் இலங்கை பாதுகாப்பாக உள்ளது என அரசாங்கம் பெருமைப்பட்டுக் கொள்வது மூடத்தனமாகும். இந்தியாவின் சனத் தொகையினை இலங்கையின் சனத் தொகையுடன் மதிப்பீடு செய்ய முடியாது.

நாட்டில் நேற்று முன்தினம் முதல் தடவையாக அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். பி.சி.ஆர் பரிசோதனைகளின் அதிகரிப்புக்கு அமையவே தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காட்டும். ஆனால் கடந்த காலங்களில் அரசாங்கம் பி.சி.ஆர் பரிசோதனைகளை குறைத்து இறுதியில் பி.சி.ஆர் பரிசோதனையை நிறுத்தும் நிலைக்கு வந்தது.

பி.சி.ஆர் பரிசோதனைகள் குறைவடையும் போது தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்படும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் மீமுர பிரதேசத்தில் இடம்பெற்ற கிராமத்துடனான கலந்துரையாடல் நிகழ்வில் தற்போது நாட்டில் பி.சி.ஆர் பரிசோதனைகள் தேவையில்லை. தடுப்பூசிகளே தேவையென குறிப்பிட்டார். நாட்டின் தலைவர் இவ்வாறு கூறும்போது சுகாதாரப் பிரிவினர் உள்ளிட்டவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளை குறைக்கவே தீர்மானிப்பார்கள்.

பி.சி.ஆர் பரிசோதனைகளை குறைத்ததன் மூலம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைவடையும். இதன் மூலம் நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக மக்களை அரசாங்கம் நம்பவைத்தது. இதற்கமைய நாட்டில் கொரோனா குறைவடைந்து விட்டது நாம் சுதந்திரமாக இருக்கலாம் என்று மக்களும் நம்பியதன் விளைவே மக்கள் தற்போது அனுபவிக்கின்றனர்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினாலும், ஏனைய நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்க அரச வைத்தியசாலைகளில் போதுமான வளங்கள் கிடையாது. மாவனெல்ல வைத்தியசாலையில் அவசர சிகிச்சை கட்டில் இல்லாமல் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிய முடிகிறது. இவ்வாறான வைத்தியசாலைகளுக்கு சிகிச்சையளிக்க குறைந்த வசதிகளையாவது விநியோகிப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.

நாடு தழுவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளில் 700 அவசர பிரிவு கட்டில்கள் மாத்திரமே தற்போது காணப்படுகின்றன. ஒரு சில வைத்தியசாலைகளில் தற்போது சிகிச்சையளிப்பதிலும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. கொவிட்-19 தாக்கம் தீவிரமமைடந்தால் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள நிலை இலங்கைக்கும் ஏற்பட அதிக சாத்தியம் உண்டு.

புத்தாண்டு காலத்திற்கு பின்னர் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்க கூடும் என பொது சகாதார பிரிவு எச்சரித்தது. இதனை இந்த அரசாங்கம் கவனத்தில் எடுக்கவில்லை. இராஜாங்க அமைச்சர் சுதர்சினி உள்ளிட்ட சுகாதாரப் பிரிவினர் பயணக்கட்டுப்பாட்டை அமுலாக்குமாறு தெரிவித்த போதிலும் அவை செயற்படுத்தப்படவில்லை என அவர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பு காரணிகள் கூட அரசியல் மட்டத்தில் தீர்மானிக்கப்படுவது அரசாங்கத்தில் பலவீனத்தன்மையினை வெளிப்படுத்துகிறது.

கொரோனா தடுப்பூசி விடயத்தில் அரசாங்கம் உரியமுறையில் செயற்படவில்லை எனவும் நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது 140 இலட்சம் பேருக்காவது தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கு ஆனால் இதுரையில் 9 இலட்சம் பேருக்கு மாத்திரம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனை மாபெரும் வெற்றியென கருத முடியாது.

இந்தியாவை உதாரணம் காட்டி நாம் அதைவிட மேல் நிலையில் இருப்பதாக அரசாங்கம் பெருமைப்பட்டுக் கொள்கிறது. உண்மையில் கொரோனாவை கட்டுபடுத்தி வெற்றிக்கண்ட பல நாடுகள் உள்ளன.

மே தின கூட்டத்தை மே முதலாம் திகதி கொழும்பிலும், மே இரண்டாம் திகதி யாழ்ப்பாணத்திலும் நடத்த தீர்மானித்திருந்தோம். அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டின் காரணமாக கொவிட் தொற்று மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஆகவே மே தின கூட்டத்தை நடத்த முடியாத நெருக்கடி நிலை காணப்படுகிறது.

ஆகவே நிகழ்நிலை ஊடாக மே தின கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மே முதலாம் திகதி காலை 10.00 மணிக்கு மக்கள் விடுதலை முன்னணி நிகழ்நிலை ஊடாக மே தின கூட்டத்தை நடத்தும் என்றார்.

No comments:

Post a Comment