அரசாங்கத்திற்கும், தோட்டக் கம்பனிகளுக்கும் எதிராக சகல தொழிலாளர்களையும் களத்தில் இறக்கி போராட்டம் நடத்த தயாராக உள்ளோம் - இராதாகிருஷ்ணன் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 8, 2021

அரசாங்கத்திற்கும், தோட்டக் கம்பனிகளுக்கும் எதிராக சகல தொழிலாளர்களையும் களத்தில் இறக்கி போராட்டம் நடத்த தயாராக உள்ளோம் - இராதாகிருஷ்ணன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதாக கூறிவிட்டு எமது தோட்டத் தொழிலாளர்களை நசுக்கும் செயற்பாட்டை அரசாங்கமும், தோட்டக் கம்பனிகளும் முன்னெடுத்து வருகின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சகல தோட்டத் தொழிலாளர்களையும் களத்தில் இறக்கி போராட்டம் நடத்த தயாராக உள்ளோம் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதாக கூறிவிட்டு எமது தோட்டத் தொழிலாளர்களை நசுக்கும் செயற்பாட்டை அரசாங்கமும், தோட்டக் கம்பனிகளும் முன்னெடுத்து வருகின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சகல தோட்டத் தொழிலாளர்களையும் களத்தில் இறக்கி போராட்டம் நடத்த தயாராக உள்ளோம் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் கொடுப்பதாக கூறிவிட்டு மலையக மக்களை பாதாள படுகுழியில் தள்ளிவிடும் சூழல் இன்று உருவாகியுள்ளது.

சம்பள நிர்ணய சபையில் 900 ரூபா பிளஸ் நூறு ரூபா என்ற அடிப்படையில் ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனக்கூறி சம்பளத்தை கொடுப்பதுடன் கம்பனிகள் பல்வேறு அட்டூழியங்களையும், அநியாயங்களையும் மலையகத்தில் செய்வதை பார்க்கின்றோம்.

இந்த மாதம் சம்பளத்தை பெற்றுக் கொள்ள மக்கள் செல்லும்போது, அவர்கள் கூறும் முக்கியமான விடயம் என்னவென்றால், மேலதிகமாக எடுக்கும் கொழுந்துக்கு பணம் கொடுக்க முடியாது எனவும் 20 கிலோ கொழுந்து பறித்துக் கொடுக்க வேண்மெனவும், ஆண், பெண் சகலரும் கொழுந்து எடுக்க வேண்டும் என்ற பல்வேறு நிபந்தனைகளை கம்பனிகள் முன்வைத்து பல்வேறு இடங்களில் எமது மக்களுக்கு அநியாயங்கள் இடம்பெற்று வருவதாக கூறுகின்றனர். எனவே இதுவொரு யுத்தகளமாக மாறியுள்ளது.

தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு பின்னர் மலையகத்தில் போராட்டம் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதென நான் கருதுகின்றேன்.

ஏனெனில் ஆயிரம் ரூபா சம்பளம் தருவதாக கூறிவிட்டு அதற்காக மக்களை நசுக்குவதும், மக்களை பழிவாங்குவதாக இருக்கின்ற இந்த தோட்டக் கம்பனிகளுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டிய கட்டாயம் இப்போது எமக்கு இருக்கின்றது.

ஆகவே, தோட்டக் கம்பனிகள் மற்றும் அரசாங்கம் எதிர்வரும் காலங்களில் இவ்வாறு நடந்துகொண்டால் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாங்கள் சகல தோட்டத் தொழிலாளர்களையும் களத்தில் இறக்கி போராட்டம் நடத்த தயாராக உள்ளோம் என்பதையும் இந்த சபையில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

No comments:

Post a Comment