(ஆர்.ராம்)
கூட்டு ஒப்பந்தத்தினை இரத்துச் செய்யும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான அறிவுறுத்தல்கள் அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் சந்திர கீர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தினை இதுவரை காலமும் கூட்டு ஒப்பந்தமே தீர்மானித்து வந்திருந்தது. தற்போது வேதன நிர்ணய சபையின் விதிகளுக்கு அமைவாக அவர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு அரச வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் கூட்டு ஒப்பந்தத்துடன் தொடர்புடைய தரப்பு அடுத்து வரும் காலத்தில் கூட்டு ஒப்பந்தம் அவசியமில்லை. அதனை இரத்துச் செய்ய வேண்டும் என்று எமக்கு எழுத்து மூலமான கோரிக்கையை விடுத்துள்ளது.
எனினும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் செல்வதற்காக முப்பது நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் கூட்டு ஒப்பந்தத்தினை இரத்துச் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அதன் பிராகரம், தற்போது, தொழில் அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் அனுமதி பெறப்பட்டு வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான அறிவுத்தல்கள் அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் அந்த அறிவித்தலை வெளியிடுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது என்றார்.
இதேவேளை, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை திங்கட்கிழமை வெளியாகவுள்ளதாக கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment