முள்ளிவாய்க்காலை கடந்து வந்திருந்தால் சுமந்திரனுக்கு வலிகள் புரிந்திருக்கும் - காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் - News View

Breaking

Post Top Ad

Monday, April 5, 2021

முள்ளிவாய்க்காலை கடந்து வந்திருந்தால் சுமந்திரனுக்கு வலிகள் புரிந்திருக்கும் - காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்

இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலை கடந்து வந்திருந்தால் சுமந்திரனுக்கு வலிகள் புரிந்திருக்கும் என வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத் தலைவி கனகரஞ்சினி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இனப் படுகொலைக்கான சாட்சியங்கள் போதாது என சர்வதேச நிபுணர்களின் கருத்தைச் சுட்டிக்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் ஊடக சந்திப்பில் கருத்துத் தெரித்தமை தொடர்பாக ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “குறுகிய காலத்தில் தேசியத்தோடு பயணிக்கின்றவர்களை ஒன்றிணைத்து பேசிக்கொண்டிருந்தோம். அந்தவேளையில் சுமந்திரன் எங்களோடு பேசும்போது எங்களின் உண்மையான தேடல் உள்ளிட்ட விடயங்களை அவருக்குத் தெளிவுபடுத்தியிருந்தோம். ஆனால், அவர் புரிந்துகொண்டும் புரியாததுபோல் நடிக்கின்றார்.

உண்மையிலேயே சுமந்திரன், ஒரு கட்சி சார்ந்தவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒரு கட்சியினுடைய பேச்சாளராகவும் இருக்கலாம். ஆனால், இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலைக் கடந்து வந்திருந்தால் எங்களுடைய வலிகளும் ஆதங்கங்களும் அவருக்குப் புரிந்திருக்கும்.

இதேவேளை, ஏற்கனவே நாங்கள் உண்மைச் சாட்சியங்களை முன்வைத்திருக்கின்றோம். ஆதாரங்களுடன் நாங்கள் ஜெனிவா முற்றத்திலே ஆயிரம் கோவைகளைச் சாட்சியங்களுடன் கொண்டுபோய் ஒப்புவித்திருக்கின்றோம். சாட்சியங்களாக அங்கு போய் பேசிக்கொண்டும் இருக்கின்றோம். இந்தளவு தெரிந்துகொண்டும் சரியான ஆதாரங்கள், போர்க்குற்ற ஆதாரங்கள் இல்லையென்று சொல்லப்படுகின்றது.

இந்த வேளையிலே சர்வதேசத்திலே இருக்கின்ற பிரதிநிதிகள், அந்தந்த நாட்டுப் பிரதிநிதிகள் எங்களுக்காக அங்கு குரல் கொடுக்கின்றார்கள். சர்வதேசத்தில் இருக்கின்ற எங்கள் உறவுகள் அங்கே குரல் கொடுக்கின்றார்கள். அவர்கள் மற்றவர்களைப்போல் தப்பினோம் பிழைத்தோம் என்று இருந்திருந்தால் இன்று நாங்கள் சர்வதேசத்தில் போய் பேசியிருக்க முடியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad