சிங்களவர்களைப்போல் தமிழ், முஸ்லிம்களும் வாழ வேண்டுமென்றால் கூட்டு சமஷ்டி முறை உள்வாங்கப்பட வேண்டும் : நிபுணர் குழுவிடம் எடுத்துரைத்தார் விக்கி - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 7, 2021

சிங்களவர்களைப்போல் தமிழ், முஸ்லிம்களும் வாழ வேண்டுமென்றால் கூட்டு சமஷ்டி முறை உள்வாங்கப்பட வேண்டும் : நிபுணர் குழுவிடம் எடுத்துரைத்தார் விக்கி

(ஆர்.யசி)

நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால், இந்த நாட்டில் சிங்கள மக்களை போன்று தமிழ், முஸ்லிம் மக்களும் வாழ வேண்டும் என்றால் உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்பில் கூட்டு சமஷ்டி முறை உள்வாங்கப்பட வேண்டும் என புதிய அரசியல் அமைப்பு வரைபு நிபுணர் குழுவிடம் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் எடுத்துரைத்தார்.

புதிய அரசியல் அமைப்பு வரைபு நிபுணர் குழுவினரை நேற்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் கொழும்பில் சந்தித்து அரசியல் அமைப்பு உருவாக்க செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடியிருந்தார். 

இது குறித்து அவர் கூறுகையில், புதிய அரசியல் அமைப்பு உருவாக்க விடயத்தில் எமது சிபாரிசுகளை பெற்றுக் கொள்ளும் விதமாக இந்த சந்திப்பு இடம்பெற்றது. ஏற்கனவே எமது கட்சியின் சிபாரிசுகளை கடந்த மாதம் 26 ஆம் திகதி அனுப்பி வைத்திருந்தோம். அதற்கமைய இன்றையதினம் (நேற்று) நிபுணர்களை சந்தித்து எமது நிலைப்பாட்டை அறிவித்திருந்தோம்.

இதன்போது பிரதான விடயமாக கூட்டு சமஷ்டி முறைமையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு எனவும், அரசியல் தீர்வு விடயத்தில் கூட்டு சமஷ்டி முறைமையே சாதகமான விளைவுகளை உருவாக்கும் எனவும் கூறியிருந்தோம்.

ஒற்றை ஆட்சியின் கீழ் பெரும்பான்மை சிங்கள மக்கள் முழுமையான அதிகாரங்களை தமக்குக் கீழ் வைத்துக் கொண்டு இந்த நாட்டின் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை புறக்கணிக்கும் செயற்பாடுகளே தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இதுவே கடந்த கால முரண்பாடுகளுக்கு பிரதான காரணமாகவும் அமைந்துள்ளது. அதுமட்டுமல்ல பொருளாதார ரீதியில் நாடு பின்னடைவை சந்திக்கவும் இதுவே பிரதான காரணமாகும். 

மேலும் இந்த நாடு பல்லின, பல மதங்களை கொண்ட பல்லினத்தன்மை கொண்ட நாடாகும், இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதும் இலங்கை அரசாங்கம் இதனை ஏற்றுக் கொண்டது. எனவே இந்த யதார்த்தத்தை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு சகலரும் இணைந்து பயணிக்கும் வழிமுறையை கையாள வேண்டும்.

எனவே தீர்வுகள் குறித்து பேசும் போதும், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போதும் தற்போதைய முறைமையில் இருந்து விடுபட்டாக வேண்டும். ஆகவேதான் மூவின மக்களும் சேர்ந்து வாழக்கூடிய ஒரு முறைமையை கையாள வேண்டும்.

சமஷ்டி அல்லது கூட்டாட்சி என்பது நாட்டை பலவீனப்படுத்தும் முறைமை அல்ல என்பதை நாம் நிபுணர் குழுவிடம் தெரிவித்திருந்தோம். புதிய அரசியல் அமைப்பு உருவாக்க விடயத்தில் எமது பக்க கருத்துக்கள் மேலும் தேவைப்படும் பட்சத்தில் எம்முடன் மீண்டும் கலந்துரையாடுவதற்கு தயாராக இருப்பதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர் என்றார்.

No comments:

Post a Comment