உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் ஒயில் இறக்குமதிக்கு தடை, இன்றே வர்த்தமானிப்படுத்தவும் உத்தரவு - முள் தேங்காய் செய்கை, பாம் எண்ணெய் பயன்பாட்டை முழுமையாக நிறுத்துவதே அரசின் நோக்கம் - News View

Breaking

Post Top Ad

Monday, April 5, 2021

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் ஒயில் இறக்குமதிக்கு தடை, இன்றே வர்த்தமானிப்படுத்தவும் உத்தரவு - முள் தேங்காய் செய்கை, பாம் எண்ணெய் பயன்பாட்டை முழுமையாக நிறுத்துவதே அரசின் நோக்கம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் ஒயில் (Palm Oil) இறக்குமதி முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய பணிப்புரையின்பேரில் அதற்கான வர்த்தமானி அறிவித்தலை இன்று (05) வெளியிடுமாறு ஜனாதிபதியின் செயலாளர் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டு சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இறக்குமதி செய்யப்பட்டுள்ள பாம் எண்ணெய்யை விநியோகிப்பதை நிறுத்துமாறு சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் முள் தேங்காய் பயிர்ச் செய்கையும் முழுமையாக தடை செய்யப்படுகின்றது.

மேலும் முள் தேங்காய் பயிர்ச் செய்கையை முழுமையாக தடை செய்வதற்கு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரையை நடைமுறைப்படுத்தும் வகையில் குறித்த சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் முள் தேங்காய் பயிரிடுவதை படிப்படியாக நிறுத்துவதற்கு ஜனாதிபதி ஆறு மாதங்களுக்கு முன்னர் பணிப்புரை விடுத்திருந்தார்.

தற்போது பயிரிடப்பட்டுள்ள முள் தேங்காய் பயிர்ச் செய்கை கட்டம் கட்டமாக ஒரு தடவைக்கு 10% என்ற வகையில் அகற்றி அதற்கு மாற்றீடாக இறப்பர் அல்லது சுற்றாடல் பாதுகாப்புடன் கூடிய ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கு அந்நிறுவனங்களுடன் சட்டத்திற்கமைவாக செயற்படுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தும்போது முள் தேங்காய் பயிர்ச் செய்கை மற்றும் பாம் எண்ணெய் பயன்பாட்டை முழுமையாக நிறுத்துவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad