வட, கிழக்கு இணைக்கப்பட்டால் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் : ஒரு சில தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளின் வியாபாரத்திற்காக கல்முனை பிரதேச செயலகம் தரம் குறைக்கப்பட்டது - இரா.சாணக்கியன் - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

வட, கிழக்கு இணைக்கப்பட்டால் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் : ஒரு சில தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளின் வியாபாரத்திற்காக கல்முனை பிரதேச செயலகம் தரம் குறைக்கப்பட்டது - இரா.சாணக்கியன்

வட, கிழக்கு இணைந்த மாகாண சபை தேர்தல் நடைபெறுமானால் அதில் தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டு. ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”சமகால அரசியலிலே மிக முக்கியமான பிரச்சனையாக தமிழ் அரசியல்வாதிகளின் மத்தியிலும், முஸ்லிம் அரசியவாதிகளின் மத்தியில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் குறைக்கப்பட்ட விடயம் இப்போதும் பேசும் பொருளாகவும், மிகவும் சூடாகவும் பேசப்பட்டிருந்தமை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கடந்த வாரம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகமாக தரம் குறைத்து பெயர் மாற்றி சமல் ராஜபக்ஷவின் அமைச்சின் ஊடாக கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டமையை நாங்கள் அறியக்கூடியதாக இருந்தது.

இந்த விடயமாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் வஜிர அபேவர்த்தணவிடம் எங்களுடைய தமிழ் தேசிய கூட்டமைப்பு நேரடியாக தெரியப்படுத்தி அதனை கதைத்து கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு நிரந்தரமாக ஒரு கணக்காளரை நியமித்திருந்தோம். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குரிய கணக்காளர் நியமனம் சம்பந்தமான பிரச்சனை 1993ஆம் ஆண்டு முதல் கணக்காளர் வெற்றிடமாக காணப்பட்டது.

குறித்த பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் நியமிக்கப்படாமையை முதன் முதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிமலநாதன் தலைமையில் ஒத்திவைக்கும் பிரேரணையில் பாராளுமன்றத்தில் கதைத்திருந்தோம்.

இதனை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சில சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும், சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்பதை மனதளவில் ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால் துரதிஸ்டவசமாக கணக்காளர் கடமையை பொறுப்பேற்பதற்கு முன்னர் சிலரின் சதித்திட்டத்தினால் தடுக்கப்பட்டு கணக்காளர் கடமையை பொறுப்பேற்கவில்லை என்பது கல்முனை மக்களுக்கு மட்டுமன்றி ஒன்றுபட்ட தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் கவலையை தந்திருந்தது. அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியும் மாறிப்போய் புதிய அரசாங்கத்தின் ஆட்சியும் வந்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒத்திவைக்கும் பிரேரணையில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு தமிழ் அரசியல்வாதிதான் அதை நிறைவேற்றக் கூடாது என்றும், செய்யக் கூடாது என்றும், காலப்போக்கில் நாங்கள் அதனை செய்வோம் எனக்கூறப்பட்டது.

இதனால் இப்போது அரசுடன் இணைந்திருக்கும் ஆளும்தரப்பு அரசியல்வாதிகளுக்கு பாதகமான சூழ்நிலை உருவாகலாம் என்பதற்கு இணங்க அன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றேன்.

நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்துள்ளோம் என்றும், கிழக்கிலே தமிழர், முஸ்லிம்கள் ஒற்றுமைப்படக் கூடாது என்பதற்காகவும், கிழக்கில் தமிழர்களின் இருப்பு பறிமுதல் செய்யப்படுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் காரணம் என பேசியவர்கள் இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் குறைக்கப்பட்டதற்கு அப்பிரச்சனை சம்பந்தமாக பேசாமல் இருப்பது கவலையளிக்கின்றது.

இவ்வாறான அரசியல்வாதிகளை கல்முனை மக்களும், அம்பாறை மாவட்ட மக்களும் இனியும் நம்பி ஏமாறக்கூடாது என்பதை தெரியப்படுத்துகின்றேன்.

ஆனால் இன்று நாட்டிலே பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பிரைச்சனைகள் உட்பட பல பிரச்சனைகளில் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாகவும், சமாதானமாகவும் செயற்படுகின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக செயற்படுவதை அவதானித்த ஒரு சில தமிழ் அரசியல்வாதிகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் இணைந்து தங்களின் குறுகியகால அரசியலுக்காகவும், தங்களின் அரசியல் வியாபாரத்திற்காகவும், அரசியல் இருப்பு வீழ்ச்சி காணும் என்பதற்காவும் எடுத்த நடவடிக்கைதான் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் குறைத்து அனுப்பட்ட கடிதமாகும்.

இவ்விடயமாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு கதைத்துள்ளேன்.

மாகாண சபைத் தேர்தல் நடப்பதற்கான எந்த அறிவிப்பும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. வட, கிழக்கு இணைக்கப்பட்டு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமானால் அதில் நான் போட்டியிடுவேன்” என்றார்.

ஆதவன்

No comments:

Post a Comment

Post Bottom Ad