மாகாண சபைத் தேர்தல் பழைய முறையில் நடாத்தப்பட வேண்டுமென்பதே முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு - எச்.எம்.எம் ஹரீஸ் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 20, 2021

மாகாண சபைத் தேர்தல் பழைய முறையில் நடாத்தப்பட வேண்டுமென்பதே முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு - எச்.எம்.எம் ஹரீஸ்

(சர்ஜுன் லாபீர்)

மாகாண சபைத் தேர்தல் பழைய விகிதாசார முறையில் நடாத்தப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்து இருந்தார்.

தொடர்ந்தும் அவர் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில் இன்று எமது நாட்டில் பல குழப்பங்கள் பல சர்ச்சைகள் நிகழ்ந்து வருகின்ற சூழ்நிலையில் மிக முக்கியமாக இன்று மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு அது சம்மந்தமான தேர்தல் முறையினை மாற்றுகின்ற சில யோசனைகள் முன்வைகப்படுகின்றது. 

மாகாண சபைகள் என்கின்ற போது எமது நாட்டில் கடந்த காலங்களில் பெரும் ஒரு சிவில் யுத்தம் தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைக்காக நடைபெற்று வந்தது. அந்த வகையில் 1987ம் ஆம் ஆண்டு அவர்களுக்கான அரசியல் அதிகார பகிர்வு ஒன்றினை வழங்குவதற்காகத்தான் இந்த மாகாண சபை முறைமை இந்த நாட்டில் உருவாக்கப்பட்டது. 

அவ்வாறு உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமை இப்பொழுது அந்த தேர்தல் நடாத்தப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒரு சூழ்நிலையில் அது சம்மந்தமான தேர்தல் முறையை மாற்றுகின்றபோது நிச்சயமாக எந்த சிறுபான்மை மக்களின் நலனுக்காக மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டதோ அந்த மக்களின் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவதனை உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நிலைமை புதிய தேர்தல் முறைமையில் அமைய வேண்டும் என்பதே எங்களுடைய வேண்டுகோளாகும்.

குறிப்பாக இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் அதேபோல் பெரும்பான்மையான சிங்கள மக்களுடைய பிரதிநிதித்துவம் அதேபோன்று மலையக தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம், முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் கடந்த விகிதாசார தேர்தல் முறைமை இருந்த போது ஒரளவுக்காவது அந்த பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப்பட்டதை மறந்துவிட முடியாது.

எனவேதான் நாங்கள் வலியுறுத்தி கூறுவது என்னவென்றால் கடந்த நல்லாட்சி காலத்தில் ஏதோ ஒரு தேவைக்காக அவசர அவசரமாக மாகாண சபைத் தேர்தல் முறை, கலப்பு தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதன் இறுதி வாக்களிப்பில் அந்த முறைமை தேவையில்லை என்று இந்த பாராளுமன்றத்தில் இருந்த 200 ற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து இருந்தார்கள்.

அதன் வெளிப்பாடு பழைய விகிதாசார தேர்தல் முறைமை மீண்டும் மாகாண சபை முறைமைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான். அன்று இருந்த பாராளுமன்றத்தின் நிலைப்பாடாக இருந்தது.

அதைத்தான் நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பிலும் முஸ்லிம் சமூகத்தின் சார்பிலும் வேண்டுகோள் விடுப்பது இந்த மாகாண சபைக்கு பழைய விகிதாசார முறைமையை நடைமுறைப்படுத்த வேண்டும் என குறிப்பிடுகின்றோம் என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment