சுற்றாடலை அழிவுக்கு உட்படுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் : இரசாயன உரவகை, கிருமிநாசினி, பூச்சிக் கொல்லி இறக்குமதி உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை - ஜனாதிபதியின் ஆ​லோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

சுற்றாடலை அழிவுக்கு உட்படுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் : இரசாயன உரவகை, கிருமிநாசினி, பூச்சிக் கொல்லி இறக்குமதி உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை - ஜனாதிபதியின் ஆ​லோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்கும் நோக்கில் சுற்றாடலை பாதுகாப்பதற்காக தீர்க்கமான தீர்மானங்களை மேற்கொள்ளும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

சுற்றாடலை அழிவுக்குட்படுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் சுற்றாடலை பாதுகாக்கும் வகையில் யோசனைகளை முன் வைப்பதற்கும் அதன் மூலம் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

‘சுபிட்சமான நோக்கு’ கொள்கைத் திட்டத்தின் கீழ் முக்கியமான சில விடயங்களை உள்ளடக்கி சுற்றாடலை பாதுகாப்பது தொடர்பில் இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உரப் பாவனை, மண் வளம், பூகோளம், கழிவு பொருட்கள், கைத்தொழில் மற்றும் மீள் சுழற்சி வலு சக்தி, குடியிருப்புகள், நகர சுற்றாடல் தொடர்பான ஆய்வு தொடர்பிலும் இதில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டிற்கு இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டில் மாத்திரம் 221 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்பட்டுள்ளது. அதனைக் கருத்திற் கொண்டு எதிர்வரும் சில வருடங்களுக்குள் இரசாயன உர இறக்குமதியை முழுமையாக நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.

எமது சுற்றாடலை பாதுகாத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் எமது நாட்டுக்கு கிடைக்கும் பொருளாதார மற்றும் சமூக பயன்களை போன்றே சர்வதேச ரீதியில் பல்வேறு நாடுகள் வேகமாக பின்பற்றும் கொள்கையின் மூலமான பிரதி பலன்கள் எமது நாட்டிற்கும் பெற்றுக்கொள்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

இது தொடர்பான பல்வேறு யோசனைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார். அதற்கான அனுமதியை அமைச்சரவையும் வழங்கியுள்ளது.

அதன்படி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரசாயன உரம், கிருமி நாசினி மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதை தடை செய்தல், இயற்கைப் பசளை உற்பத்தி தொடர்பில் உற்பத்தியாளர்களுக்கு நிதியுதவிகளை வழங்குதல், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்தல், முள்ளுத்தேங்காய் உற்பத்தியை படிப்படியாக தடை செய்தல் உள்ளிட்ட விடயங்களும் மேற்படி யோசனைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad