சிரிய தலைநகர் டமஸ்கஸிற்கு அருகே இடம்பெற்ற ஏவுகணைத் தாக்குதல்களில் நான்கு படையினர் காயமடைந்துள்ளனர். இதற்கு இஸ்ரேல் மீது சிரிய அரச ஊடகம் குற்றம் சாட்டியுள்ளது.
நேற்று இடம்பெற்ற தாக்குதலின்போது பல ஏவுகணைகளையும் இடைமறிப்பதற்கு சிரிய வான் பாதுகாப்பு முறையால் முடிந்ததாக அந்நாட்டு இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சிரிய அரச செய்தி நிறுவனமான சானா செய்தி வெளியிட்டுள்ளது.
குறைந்தது ஒரு வெடிப்புச் சத்தத்தை கேட்டதாக டமஸ்கஸ் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அண்டை நாடான லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கோலன் குன்று பக்கமாக இருந்து இந்த ஏவுகணைகள் வீசப்பட்டிருப்பதாக அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
டமஸ்கஸிற்கு அருகில் இருக்கும் இராணுவ தளம் ஒன்றை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டபோதும் அதுபற்றி மேலதிக விபரத்தை வெளியிடவில்லை.
சிரிய உள்நாட்டு போருக்கு மத்தியில் அந்நாட்டில் ஈரானுடன் தொடர்புபட்ட இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் நூற்றுக்கணக்கான தாக்குதல்களை நடத்தியபோதும் அது பற்றி வெளிப்படையாக கருத்துக் கூறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment