முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் பலி, மற்றுமொருவர் காயம் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 25, 2021

முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் பலி, மற்றுமொருவர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வட்டுவாகல் பாலத்திற்கு அண்மையாக உள்ள காணி ஒன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இன்று (25) மாலை 1.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது.

இந்த வெடிப்புச் சம்பவம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

குறித்த வெடிப்பு சம்பவம் காரணமாக சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததோடு மற்றொருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் செல்வபுரம் முல்லைத்தீவை சேர்ந்த 19 வயதுடைய குமாரசாமி சந்திரமோகன் டிசான் எனவும் காயமடைந்த நபர் வட்டுவாகல் முல்லைத்தீவைச் சேர்ந்த 20 வயதுடைய செல்வகுமார் சயந்தரூபன் எனவும் தெரியவருகின்றது.

உயிரிழந்த இளைஞனின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதி அபாய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் வெடிப்பு சம்பம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

வட்டுவாகல் பாலத்தில் குளிர்பான வியாபாரம் செய்யும் செல்வபுரத்தினை சேர்ந்த குறித்த இளைஞன் தன் தாயின் கண்முன்னே இந்த வெடிப்பு சம்பவத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இந்த குடும்பம் நீண்ட காலமாக வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் சர்பத், இளநீர் வியாபராம் செய்து வருகின்றார்.

தனது பிள்ளையினை பறி கொடுத்த தாயார் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கையில் தனது பிள்ளையும் அவனின் நண்பனுமான வட்டுவாகல் கிராமத்தினை சேர்ந்த இரண்டு இளைஞர்களும் தன்னிடம் சர்பத் தயாரிக்குமாறு சொல்லிவிட்டு அருகில் சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள இடத்திற்கு நடந்து சென்றுள்ளார்கள்.

திடீரென வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. அருகில் எவரும் இல்லை நான் ஓடிச் சென்று பார்த்தேன் எனது மகன் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கிடப்பதுடன் அவனது நண்பனும் காயமடைந்து கிடந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய வெடி மருந்து நிபுணர்கள் வரவளைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக முல்லைத்தீவு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு நிருபர் தவசீலன்

No comments:

Post a Comment