புத்தாண்டு காலத்திற்கு பின்னர் தொற்று அதிகரித்துள்ளமைக்கு அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் - சுசில் பிரேமஜயந்த - News View

About Us

About Us

Breaking

Friday, April 30, 2021

புத்தாண்டு காலத்திற்கு பின்னர் தொற்று அதிகரித்துள்ளமைக்கு அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் - சுசில் பிரேமஜயந்த

(இராஜதுரை ஹஷான்)

சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. நாட்டை முடக்கினால் பொருளாதார ரீதியில் மக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை வெற்றி கொள்ள பொதுமக்கள் அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தொலைநோக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கம் தற்போது சடுதியாக அதிகரித்துள்ளது. இவ்விடயத்தில் அரசாங்கத்தை விமர்சிப்பது பயனற்றது.

பலம் வாய்ந்த நாடுகளினால் கூட கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு காலத்திற்கு பின்னர் கொவிட் தொற்று அதிகரித்துள்ளமைக்கு அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை வெற்றி கொள்வது குறித்து கவனம் செலுத்த வேண்டும் அதனை விடுத்து ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டிக் கொள்வது பயனற்றதாகும். நெருக்கடியான சூழ்நிலையை வெற்றி கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

நாட்டை முழுமையாக முடக்கினால் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.

கொவிட்-19 முதல் மற்றும் இரண்டாம் தாக்கத்தினால் நாட்டின் பொருளாதாரத்திற்கும், மக்களின் வாழ்வியலுக்கும் ஏற்பட்ட சவால்கள் இதுவரையில் சீர் செய்யப்படவில்லை.

நெருக்கடியான நிலையிலும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பல வழிமுறைகளில் நிவாரணம் வழங்கியுள்ளது. தற்போதைய நிலையினை கருத்திற்கொண்டு முழு நாட்டையும் முடக்கும் தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

எதிர்தரப்பினர் குறிப்பிடுவது போன்று நாட்டை முடக்கினால் மக்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். நிலைமையினை சீர் செய்ய பல வழிமுறைகளில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment