சீன பாதுகாப்பு அமைச்சரின் வாகனத் தொடரணி : இடையூறு ஏற்படுத்தியவர் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, April 30, 2021

சீன பாதுகாப்பு அமைச்சரின் வாகனத் தொடரணி : இடையூறு ஏற்படுத்தியவர் கைது

கடந்த 27ஆம் திகதி இரவு சீன பாதுகாப்பு அமைச்சர் அழைத்து வரப்பட்ட வாகனப் பேரணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொரளை பிரதேசத்தில் வைத்து, வாகன ஒலி எழுப்பி எதிர்ப்பு வெளியிடத் தூண்டிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அழைத்து வரப்பட்ட சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பென்ஹியின் விசேட வாகனப் பேரணிக்கு வழி விடுவதற்காக பொரளை மயானத்திற்கு முன்பாக, பௌத்தாலோக வீதிக்கு செல்லும் சந்தியில் வைத்து வாகனங்களின் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

குறித்த சந்தர்ப்பத்தில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து, ஏனைய வாகன சாரதிகளை தூண்டி அவர்களை ஒன்றுகூட்ட்டியமை, வாகன பேரணிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

வியன்னா உடன்படிக்கைக்கு அமைய, வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கான பாதுகாப்பு வழங்குதல், அது தொடர்பான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் குறித்த நாட்டின் பொறுப்பாகும் என, அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன் சீனா போன்ற பலம்பொருந்திய நாடொன்றின் பாதுகாப்பு அமைச்சருக்கான பாதுகாப்பை வழங்குவது, இலங்கையின் கடமையாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, விசேடமாக இரவு நேரத்தில் குறித்த வாகன பேரணி சென்ற வீதியில் வாகனங்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்தியதாகவும், இந்நிலையில் குறித்த நபரால் இவ்விடயங்களை கருத்தில் கொள்ளாது, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு, ஏனைய வாகன சாரதிகளை தூண்டி அவர்களை ஒன்றுகூட்ட்டியமை உள்ளிட்ட குற்றங்கள் குறித்த வீடியோ மூலம் தெளிவாக புலப்படுவதால், குறித்த நபர் நேற்றையதினம் (29) இரவு பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கைதான 31 வயதான நபர், பத்தரமுல்லை, பெலவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், 10 வருடங்களாக அவுஸ்திரேலியாவில் வசித்து வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்றையதினம் (30) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த கைது நடவடிக்கையை ஐ.தே.க. கண்டிப்பதாக அறிவித்துள்ளது.

பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை வெளியிடும் உரிமை உள்ளதாகவும், கருத்து வெளியிடுதல் உரிமை மதிக்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் ஐ.தே.க. ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் தனது ட்விற்றர் கணக்கில் கருத்து வெளியிட்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, இந்நாட்டு ஜனாதிபதியின் போக்குவரத்தின் போதிலும் கூட நாம் பாதையை மூடுவதில்லை ஆயினும் வியன்னா உடன்படிக்கைக்கு அமைய, ஒரு நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிக்கு உச்சபட்ச பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை GOSL (அரசாங்கம்) கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்யுள்ளார்.

இது தொடர்பில் மக்கள் அறிந்து ஒத்துழைப்பு வழங்குவார்கள் என தான் நம்புவதாக அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment