சிவஞானசோதி ஐயாவின் மறைவு முழு இலங்கையின் புலமைத்துவ பரப்பில் பாரிய இடைவெளியை தோற்றுவித்துள்ளது - காதர் மஸ்தான் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 7, 2021

சிவஞானசோதி ஐயாவின் மறைவு முழு இலங்கையின் புலமைத்துவ பரப்பில் பாரிய இடைவெளியை தோற்றுவித்துள்ளது - காதர் மஸ்தான்

இலங்கை நிர்வாக சேவையின் மூத்த ஓய்வு நிலை அதிகாரி சிவஞானசோதி ஐயாவின் மறைவு தமிழ் தேசிய பரப்பில் மாத்திரமன்றி முழு இலங்கையின் புலமைத்துவ பரப்பிலும் பாரிய இடைவெளியினை தோற்றுவித்திருப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, தான் வகித்த உயரிய பதவிகள் மூலம் அனைத்து மக்களுக்குமான மகத்தான சேவைகளை மனித நேயத்துடன் சிவஞானசோதி ஐயா ஆற்றியிருந்தார்.

எப்பொழுதும் மக்களுக்கு உதவிடும் உயர்ந்த குணங்களையே தன்னிடம் கொண்டிருந்த அவர் நேரகாலம் பாராது மக்களுக்காக உழைத்து வந்தார்.

நான் பிரதி அமைச்சராக பதவி வகித்த காலங்களில் பல்வேறு பட்ட அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு திட்டங்களை வகுப்பதில் எனக்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டதுடன் அதற்கு பின்னரான காலங்களிலும் நான் மேற்கொண்ட பல்வேறு அபிவிருத்திகள் தொடர்பில் தனது ஆலோசனைகளை வழங்கி அவற்றை மேம்படுத்தவும் இன்னும் செயற்றிறன் மிக்கதாக விருத்தி செய்யவும் தனது வாண்மைமிக்க பங்களிப்பையும் நல்கினார்.

பல்வேறு அமைச்சுகளின் செயலாளராக பணியாற்றியதுடன் உள்நாட்டிலும் கடல் கடந்தும் பல பயிற்சிகளையும் உயரிய விருதுகளையும் பெற்று தாய்நாட்டுக்கும் பெரும் புகழ் ஈந்தார்.

தனது ஓய்வு நிலைக்கு பின்னரான காலப் பகுதியில் பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினராகவும் சுயாதீன மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளராகவும் பதவி ஏற்று நாட்டின் கீர்த்திக்கு வலு சேர்த்தார்.

அன்னாரின் மறைவால் துயருறும் குடும்பத்தினர் நண்பர்கள் புலமையாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment