இலங்கை வீரர் நுவன் சொய்ஷாவுக்கு 6 வருட போட்டித் தடை - 2018 நவம்பர் 31 முதல் அமுலாகும் வகையில் தண்டனை - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

இலங்கை வீரர் நுவன் சொய்ஷாவுக்கு 6 வருட போட்டித் தடை - 2018 நவம்பர் 31 முதல் அமுலாகும் வகையில் தண்டனை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான நுவன் சொய்ஷாவுக்கு, சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ICC) 6 வருட போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நவம்பரில் அவர் மீது ICC யின் ஊழல் தடுப்புச் சட்ட திட்டத்தின் 3 விதிகளை மீறிய குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியிருந்தது.

ICC இன் 2.1.1, 2.1.4, 2.4.4 ஆகிய 3 குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இடம்பெற்ற விசாரணைகளுக்கமைய, விசாரணைகள் நிறைவடையும் வரை கடந்த 2018 இலேயே அவருக்கு போட்டித்தடை விதிக்கப்பட்டிருந்தது.

போட்டி நிர்ணயத்திற்கு துணை புரிதல் அல்லது அதற்கு காரணமாக இருத்தல், அதற்கு ஆலோசனை வழங்குதல், ஆட்ட நிர்ணயத்திற்கு அழைப்பு விடுக்கப்படும்போது அது தொடர்பில் தகவல்களை வெளியிடாதிருத்தல் உள்ளிட்ட பிரிவுகளுக்கமைய அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், குற்றங்கள் நிரூபணமானதைத் தொடர்ந்து, அதற்கான தண்டனையை ICC தற்போது அறிவித்துள்ளது.

அதற்கமைய, 2018 நவம்பர் 31ஆம் திகதி முதல் 6 வருடத்திற்கு, அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அவரது போட்டித் தடை எதிர்வரும் 2024 இல் நிறைவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிக்காக 125 போட்டிகளில் நுவன் சொய்ஷா விளையாடியுள்ளார்.

அண்மையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தில்ஹார லொகுஹெட்டிகேவிற்கு 8 வருட போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், ரி10 லீக்கில் பங்கேற்றமை தொடர்பில் எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் (ECB) ஊழல் தடுப்பு குறியீட்டின் நான்கு எண்ணிக்கையை மீறியதாக எமிரேட்ஸ் கிரிக்கெட் சபை (ECB) சார்பாக, ICCயும், நுவன் சொய்ஷா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பிலான நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக, ICC மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad