ஜனாதிபதி கோத்தாபயவினால் வெளியிடப்பட்ட புதிய புனர்வாழ்வு வர்த்தமானியை தடை செய்யக் கோரி உயர் நீதிமன்றில் 5 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Monday, April 12, 2021

ஜனாதிபதி கோத்தாபயவினால் வெளியிடப்பட்ட புதிய புனர்வாழ்வு வர்த்தமானியை தடை செய்யக் கோரி உயர் நீதிமன்றில் 5 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல்

(எம்.எப்.எம்.பஸீர்)

அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பாக சரணடையும் அல்லது கைது செய்யப்படும் நபர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் சட்ட விதிகள் உள்ளடக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட நிலையில், அந்த வர்த்தமானிக்கு தடை கோரி உயர் நீதிமன்றில் ஐந்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரையில் இந்த 5 மனுக்களும் இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த வர்த்தமானியானது, அரசியலமைப்பின் 3 ஆவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளதாக கூறியே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்களில் ஒருவரான அம்பிகா சற்குணநாதன், மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம், மடவளை பசாரை சேர்ந்த அப்துல் ஜவாத் இன்சாப், அப்துல் வஹாப் ஹில்மி அஹமட் மற்றும் பாத்திமா சில்மா மொஹிதீன் அஹமட், அரநாயக்கவைச் சேர்ந்த எம்.எல். நெளபர் அமீர் ஆகியோரால் இந்த 5 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் உள்ளிட்டவர்கள் ஊடாக இந்த மனுக்கள் இவ்வாறு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்களில் பாதுகாப்பு செயலர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால் தர்ஷன ஹெட்டி ஆரச்சி, பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சட்டமா திபர் ஆகிய நால்வர் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஏனைய இரு மனுக்களில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால் தர்ஷன ஹெட்டி ஆரச்சி, பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சட்டமா திபர் ஆகிய மூவர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தின் 27 ஆம் அத்தியாயத்தின் கீழ் ஜனாதிபதியினால் கடந்த மார்ச் 12 ஆம் திகதி 2218/68 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

கடந்த மார்ச் 9 ஆம் திகதி ஜனாதிபதியினால் கையெழுத்திடப்பட்டு மார்ச் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த புனர்வாழ்வளித்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தலின் முதலாவது ஒழுங்கு விதியானது, இவ்வர்த்தமானியின் உள்ளடக்கத்தை '2021 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு (வன்முறையான மட்டு மீறிய மதக் கொள்கையைக் கொண்டிருப்பதற்கு எதிரான தீவிரமயமற்றதாக்குதல்) ஒழுங்கு விதிகள்' என அறிமுகம் செய்துள்ளது.

இவ்வர்த்தமானியின் 5 ஆம் ஒழுங்கு விதியின் 4 ஆவது உப ஒழுங்கு விதியானது, அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பாக சரணடையும் அல்லது கைது செய்யப்படும் நபர் ஒருவர், வழக்கு விசாரணைகள் இன்றி புனர்வாழ்வுக்கு உட்படுத்த நீதிவான் ஒருவருக்கு அதிகாரமளிக்கின்றது. இதற்காக சட்டமா அதிபரின் எழுத்து மூல அனுமதி மட்டுமே அவசியமாகிறது.

குறித்த ஒழுங்கு விதி பின்வருமாறு கூறுகின்றது.
'புரியப்பட்ட தவறின் தன்மைக்கு இணங்க சரணடைந்தவர் ஒருவருக்கு அல்லது, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர் ஒருவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை தொடுப்பதற்குப் பதிலாக புனர்வாழ்வு நிலையமொன்றில் அவருக்கு புனர்வாழ்வளிக்கப்படுதல் வேண்டும் என சட்டமா அதிபர் அபிப்பிராயப்படுமிடத்து, அத்தகைய சரணடைந்தவர் அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர் சட்டமா அதிபரின் எழுத்து மூல அங்கீகாரத்துடன் நீதிவான் ஒருவர் முன் நிறுத்தப்படுதல் வேண்டும்.

நீதிவான் ஒருவர், 3 ஆம் ஒழுங்கு விதியில் குறித்துரைக்கப்பட்ட தவறுகள் அல்லாத வேறு ஏதும் தவறுகளை அத்தகைய சரணடைந்த அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தவர் புரிந்துள்ளாரா என்பதை கருத்தில் கொண்டு ஒரு புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருடத்தை விஞ்ஞாத காலப்பகுதிக்காக அவரை புனர்வாழ்வுக்காக ஆற்றுப்படுத்தி கட்டளையாக்கலாம்.'

எனினும் இலங்கையின் அரசியலமைப்பானது, கைது செய்யப்படும் ஒவ்வொருவருக்கும் நியாயமான வழக்கு விசாரணைகளுக்கு முகம் கொடுப்பதற்கான அடிப்படை உரிமை உள்ளதாக கூறும் நிலையில், இந்த வர்த்தமானி அறிவித்தலானது, இலங்கையின் அரசியலமைப்பையும், சர்வதேச இணக்கப்பாடுகளையும் குறிப்பாக ஐ.சி.சி.பி.ஆர். எனப்படும் சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டினையும் மீறும் வகையில் அமைந்துள்ளதாக மனுதாரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக குறித்த புனர்வாழ்வு வர்த்தமானியானது, அரசியலமைப்பின் 3 ஆவது அத்தியாயத்தின் கீழ் உள்ள 10 ஆவது உறுப்புரையான மத சுதந்திரம், சிந்தனை சுதந்திரம், மனசாட்சியை பின்பற்றுவதர்கான சுதந்திரம், 11 ஆவது உறுப்புரையான சித்திரவதைக்கு உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம், 13 ஆவது உறுப்புரையான தன்னிச்சையாக கைது செய்யப்படாமல், தண்டிக்கப்படாமல் இருப்பதற்கான உரிமை, 14 ஆம் உறுப்புரையான பேச்சு, ஒன்றுகூடல், நடமாடும் சுதந்திரம் ஆகியவற்றை மீறும் வகையில் அமைந்துள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

எனவே குறித்த வர்த்தமானியை அமுல்படுத்துவதை உடனடியாக தடை செய்யுமாறும், மனுக்களை விசாரணைக்கு ஏற்று, மனுதாரர்களுக்கு அரசியமைப்பு ஊடாக வழங்க்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் 10,11,12(1), 13 (1), 13 (2), 13 (3), 13 (4),13 (3), 14 (1) அ, ஆ,இ, ஈ, உ, ஊ,எ ஆகிய உறுப்புரைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றை கோரியுள்ளனர்.

No comments:

Post a Comment