கடந்த நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் ராஜகிரியவில் அமைந்துள்ள தனியார் கட்டடமொன்றுக்கு கொண்டு செல்லப்பட்ட விவசாய அமைச்சை மீண்டும் “கொவிஜன மந்திரய”வுக்கு கொண்டு வருவதற்கு கட்டடத்திற்கு சொந்தமான தனியார் நிறுவன முகாமைத்துவதால் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஐந்து வருட காலமாக 189 கோடி ரூபா செலவு செய்து தனியார் கட்டடமொன்றில் இயங்கி வந்த விவசாய அமைச்சை “கொவிஜன மந்திரவுக்கு மீண்டும் மாற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வந்த பின்னர் முடிவு செய்திருந்தார்.
அதன்படி இலக்கம் 19/3393/217/001 என்னும் அமைச்சரவைப்பத்திரத்திற்கு 2020 ஜனவரி மாதம் 3ம் திகதி அனுமதி கிடைக்கப் பெற்றதுடன் அம்முடிவு அம்மாதத்திலே 30ம் திகதியிலிருந்து செயற்படுத்தப்பட்டது.
ஆனால் அமைச்சுக்குச் சொந்தமாக அரசாங்க சொத்துக்களை அக்கட்டடத்திலிருந்து அகற்றும் பணிக்கு அந்நிறுவனத்தின் முகாமைத்துவம் இவ்வருட மார்ச் மாதம் 11ம் திகதியிலிருந்து தடை செய்துள்ளது.
இதன் காரணமாக வெலிக்கடை பொலிஸ் நிலையத்துக்கு முறைபாடு செய்ய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
‘கொவிஜன மந்திரய’ பாராளுமன்றத்தின் வேறு நடவடிக்கைகளுக்குத் தேவையெனக்கூறி கடந்த அரசு விவசாய அமைச்சை ராஜகிரியவில் அமைந்துள்ள தனியார் கட்டடத்தில் 2016.04.08ம் திகதி கொண்டு சென்றது.
அதற்காக ஐந்து வருட ஒப்பந்தம் ஒன்றும் செய்துகொள்ளப்பட்டது. மாதாந்த வாடகையாக மாத்திரம் 155 கோடி ரூபாவிற்கும் அண்மித்த தொகையை அரசாங்கம் வழங்க வேண்டியுள்ளது.
2016 ஏப்ரல் மாதம் 8ம் திகதி தொடக்கம் 2021 மார்ச் மாதம் 7ம் திகதி வரைக்குமான வாடகையாக மேற்குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டியுள்ளது.
அமைச்சை அக்கட்டடத்தில் அமைப்பதற்காக காரியாலய வசதியை வழங்கல், மரத்தளபாடங்கள் மற்றும் உபரணங்களை விலைக்கு வாங்கல் தொடர்பாடல் வசதிகள் மற்றும் ஆலோசனை சேவைகளுக்காக செலவிடப்பட்ட தொகை 34 கோடி ரூபா மொத்த வாடகைக்கு மேலதிகமாகவும் செலுத்த வேண்டியுள்ளது.
விவசாய அமைச்சை மற்றும் கட்டடத்துக்கு சொந்தமான தனியார் நிறுவனத்துக்கிடையேயான ஒப்பந்தம் இம்மாதம் 7ம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.
அன்றைய தினம் குத்தகைக்குப் பெற்றவர் மீண்டும் குத்தகைக்கு வழங்கியவரிடம் கையளிக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment