முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு 03 கண்டம் வயல்வெளிப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிகள் மூவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்கள்.
நேற்று (15) மாலைவேளை தண்ணிமுறிப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்துவந்துள்ளது.
இந்நிலையில் விவசாயிகள் மூவர் குறித்த பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்கள்.
இரவாகியும் இவர்கள் விடு திரும்பாத நிலையில் இவர்களை தேடி உறவினர்கள் விவசாயிகள் சென்றவேளை வயல்நிலத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பில் இரவு 10.00 மணியளவில் முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு பொலீசார் வருகை தந்தனர்.
சம்பவத்தில் குமுழமுனை மேற்கு 07ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 36 வயதான கணபதிப்பிள்ளை மயூரன், குமுழமுனை கிழக்கைச் சேர்ந்த 30 அகவையுடைய சிவசிதம்பரம் யுகந்தன், வற்றாப்பளை கிராமத்தைச் சேர்ந்த 42 வயதுடைய யோகலிங்கம் சுஜீவகரன் ஆகிய குடும்பஸ்தர்களே இதில் உயிரிழந்தவர்களாவர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தடையவியல் பொலீசார் சட்டவைத்திய அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா முன்னிலையாகி நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து உடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டதோடு மழை மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
(கீதன், சண்முகம் தவசீலன்)
No comments:
Post a Comment