சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் 3 மில்லியன் குடும்பங்களுக்கு தலா ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அரசு ரூ. 15 பில்லியனை செலவிட்டுள்ளது.
பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இந்த விசேட புத்தாண்டு கொடுப்பனவு ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் பயனாளர்களுக்கு வழஙகப்பட்டது.
ஏப்ரல் 12 ஆம் திகதி இந்த கொடுப்பனவு 12 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமைக்குள் (16) அனைத்து பயனாளர்களுக்கும் இந்த 5000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ், சிங்கள புத்தாண்டு புத்தாண்டின் போது மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சிரமங்களுக்கு தீர்வாக குறைந்த வருமானம் பெறும் 30 இலட்சம் குடும்பங்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என பெசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
சமுர்த்தி பெறுநர் குடும்பங்களின் ஏழு பிரிவுகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு இந்த விசேட கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கமைவாக சமுர்த்தி பெறுநர் குடும்பங்கள், குறைந்தவருமானம் கொண்டகுடும்பங்கள், முதியோர் கொடுப்பனவு பெறும் குடும்பங்கள், ஊனமுற்றோர் கொடுப்பனவு பெறும் குடும்பங்கள், சிறுநீரகநோய் காரணமான கொடுப்பனவு பெறும் குடும்பங்கள், நூறு வயதை கடந்தவர்களுக்கான கொடுப்பனவு பெறும் குடும்பங்கள், கோரிக்கை விண்ணப்பம் முன்வைத்து தகுதி பெற்ற குடும்பங்கள் என்பன தெரிவு செய்யப்பட்டன.
மேற்படி 6 பிரிவுகளின் கீழுள்ள கோரிக்கை முன்வைத்து உதவிபெற தகுதியான குடும்பங்களும் இதில் உள்வாங்கப்பட்டிருந்தன.
அத்துடன் ஒரே குடும்பத்தில் இருவர் இதற்கான தகுதியை பெற்றிருப்பின், அக்குடும்பத்திற்கு உச்சபட்சமாக ரூ. 5,000 மாத்திரம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
குடும்பங்களிடையே காணப்படும் உப குடும்பங்களுக்கும் குறித்த ரூ. 5,000 கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதோடு அது தொடர்பான இறுதித் தீர்மானத்தை பிரதேச செயலாளரினால் எடுக்கமுடியும் என சுட்டிக்காட்டப்பட்டது.
விசேட பண்டிகை கொடுப்பனவை பயனாளிகளுக்கு மிக விரைவாக வழங்கும் பொருட்டு, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன், தகுதிவாய்ந்த உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கான அதிகாரம் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில், பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ள கஷ்டங்களை ஈடுசெய்து, அவர்களது நாளாந்த வாழ்க்கையை சீராக்கும் வகையில் இக்கொடுப்பனவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக அரசாங்கம் பலசந்தர்ப்பங்களில் ரூ .5 ஆயிரம் கொடுப்பனவை வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
(ஷம்ஸ் பாஹிம்)
No comments:
Post a Comment