கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் 28 பேரை பிணையில் எடுக்க குவிந்த 224 பேர் - News View

Breaking

Post Top Ad

Friday, April 30, 2021

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் 28 பேரை பிணையில் எடுக்க குவிந்த 224 பேர்

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை 28 பேரை பிணையில் எடுப்பதற்காக 224 பேர் நீதிமன்றுக்கு சமூகமளித்திருந்தனர்.

கடந்த, ஈஸ்டர் தினத்தன்று பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா மற்றும் கரடிக்குன்று கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தையடுத்து பொலிஸாரினால் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் 15 பேரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தபட்டதனை தொடர்ந்து அவர்கள் நேற்று வியாழக்கிழமை பிணையில் செல்ல கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இதன்போது கைது செய்யப்பட்ட 28 பேருக்கும் ஊருக்குள் புகுந்து சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை, தாக்கியமை, என எட்டு முறைப்பாட்டாளர்கள் முறைப்பாடு செய்திருந்தனர். 

 இதனடிப்படையில் ஒவ்வொருவருக்கும் B/400,B/405,B/406, B/407, B/463, B/464, B/465, B/466 ஆகிய எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அந்த வகையில் ஒரு வழக்குக்கு ஒரு ஆட்பிணை என்ற அடிப்படையில் ஒருவருக்கு எட்டு ஆட் பிணையில் செல்ல நீதிமன்று உத்தரவு பிறப்பித்தது.

ஆகவே மேற்குறித்த 28 பேரையும் பிணை எடுக்க குறித்த கிராமங்களிலிருந்து 224 பேர் நீதிமன்றுக்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad