ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரை 702 பேர் கைது - ரிஷாத், ரியாஜ் ஆகியோரை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க எதிர்பார்ப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, April 24, 2021

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரை 702 பேர் கைது - ரிஷாத், ரியாஜ் ஆகியோரை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க எதிர்பார்ப்பு

(செ.தேன்மொழி)

கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் 72 மணித்தியாலம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்தோடு சந்தேகநபர்களை தொடர்ந்தும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதலுக்கு பின்னர் கொலையாளிகள் உயிரிழந்திருந்தாலும், அவர்களுக்கான உதவிகளை வழங்கிய நபர்கள் தொடர்பிலும் விசாரணை அதிகாரிகள் கவனம் செலுத்தியிருந்தனர்.

இந்நிலையில் தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதைப் போன்று, தாக்குதலுக்கு முன்னர் அதாவது 2017, 2018 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள், அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டன.

அதற்கமைய ஏற்கனவே 697 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை குளியாப்பிட்டியில் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், இன்றையதினம் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரையில், 702 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 202 பேர் சிறை வைக்கப்பட்டுள்ளதுடன், பயங்கரவாத தடுப்பு பிரிவு, பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவில் 83 பேர் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களில் பயங்கரவாதியான சஹ்ரான் ஹாசிமின் மனைவி உள்ளிட்ட பயங்கரவாதிகளின் உறவினர்கள் பலரும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை சஹ்ரானின் ஆலோசனைக்கமைய கல்முனை, அக்கரைப்பற்று, ஒலுவில், அம்பாந்தோட்டை மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளி நாடாத்தப்பட்டதாக கூறப்படும் அடிப்படைவாத வகுப்புகளில் கலந்து கொண்டவர்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

தற்கொலை தாரிகளுக்கு உதவி வழங்கிய நபர்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்றதுடன், அவர்களுக்கு நிதி கிடைக்கப் பெற்ற விதம் தொடர்பிலும் இதன்போது விசாரணை அதிகாரிகள் கவனம் செலுத்தியிருந்தனர்.

அதற்கமைய கொலையாளிகளுக்கு சிலர் உதவி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. தனி நபர்களின் சாட்சிகள், விசாரணையின் போது கிடைக்கப் பெற்ற சாட்சிகள் மற்றும் தொழிநுட்ப ரீதியிலான சாட்சிகள் ஊடாகவே இது தொடர்பில் தெரிய வந்திருந்தது. 

இதன்போது வங்கிக் கணக்குகள் மற்றும் இந்த கணக்குகளின் பண பரிமாற்றம் தொடர்பிலும் விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதனடிப்படையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரன் ரியாஜ் பதியுதீனை குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் தற்போது பயங்கரவாத தடுப்பு பிவினரால் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

979 இலக்கம் 48 இல் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் சட்ட விதிகளுக்கு கீழ், ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்காக அதிகாரிகளால் அனுமதி பெற்றுக் கொள்ள முடியும்.

அதற்கமைய சந்தேக நபர்களை 72 மணித்தியாலம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்த முடியும். பயங்கரவாத தடைச் சட்டத்தில் 6:1 சரத்துக்கமைய 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், அதற்கமைய அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் 9:1 சரத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தவும் அனுமதி பெற்றுக் கொள்ள முடியும். அது தொடர்பிலும் விசாரணை அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர். 

இந்நிலையில் குற்றச் செயற்பாடுகளில் ஈடுபடும் ஒருவருக்கு உதவி ஒத்தாசைகள் புரிபவர்களை பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு அனுமதியுள்ளது.

கேள்வி : உயிர்த் தஞாயிறு தின தற்கொவை குண்டுத் தாக்குதல் தொடர்பில் பொலிஸார் முறையாக விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்று பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன இது தொடர்பில் உங்களது கருத்து ?

பதில்: இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமையவே 702 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பல்வேறு இடங்களில் பல்வேறு நபர்களால் பல கருத்துகள் கூறப்படலாம். 

இவ்வாறு கருத்து தெரிவிப்பவர்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவு, பயங்கரவாத தடுப்பு பிரிவு அல்லது குற்றப் புலனாய்வு பிரிவில் வந்து வாக்குமூலம் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். அப்போது அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும்.

No comments:

Post a Comment