பொலன்னறுவை, அநுராதபுரத்தில் இந்து ஸ்தாபனம் அமைக்க நிலம் தருவீர்களா? - உடலங்கள் எரிக்கப்படும்போது 20 க்கு ஆதரவளித்து சமூகத்துக்கே துரோகம் செய்தவர் ஹரிஸ் : கோவிந்தன் கருணாகரம் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 24, 2021

பொலன்னறுவை, அநுராதபுரத்தில் இந்து ஸ்தாபனம் அமைக்க நிலம் தருவீர்களா? - உடலங்கள் எரிக்கப்படும்போது 20 க்கு ஆதரவளித்து சமூகத்துக்கே துரோகம் செய்தவர் ஹரிஸ் : கோவிந்தன் கருணாகரம்

புத்தரின் சின்னங்களைக் காட்டி நிலங்களை அபகரிக்கும் நீங்கள் பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் இந்து ஸ்தாபனம் அமைப்பதற்கு நிலம் தருவீர்களா என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன், கல்முனை வடக்கு பிரதேச சபையின் தரமிறக்கமானது கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான பிரேரணைக்கு ஆதரவு பெறுவதற்கா எனவும் அவர் நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போது கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் உரையாற்றுகையில், “நமது நாடு ஒரு சுந்தரத் தீவாகும். இந்து சமூத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த முத்து என்பதுடன் உலகுக்கு ஆன்மீக ஒளியைப் பரப்பிய நான்கு மதங்களும் தளைத்தோங்கும் நாடாகும்.

அத்துடன், மூப்பு, பிணி, சாக்காடு கண்டு தனது இல்லற வாழ்வில் அழகிய இளம் மனைவியையும் துறந்து தனக்கு ராஜபோகம் தரக்கூடிய அரச சுகபோகங்கள் அனைத்தையும் துறந்து உலகுக்கு ஞான ஒளியினை தன் பரிநிர்வாணம் மூலம் ஏற்படுத்திய கௌதம புத்தரின் ஆன்மீக ஒளியின் பெருமையினைப் பின்பற்றும் நாடுமாகும்.

இந்நிலையில், புத்தரை விசுவாசிக்கும் நாட்டில் மாறிமாறி ஆட்சி செய்த அரச தலைவர்களுக்கு அந்த விசுவாசம் உண்மையாகவே இருக்குமானால், நாட்டில் அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விவாதம் ஒன்று ஏன் தேவை?

இந்த அரச தலைவர்களால் உதட்டளவில் பேசப்படும் பௌத்த தர்மம், தேசாபிமானம் என்பன அவர்களின் உள்ளத்திலிருந்து வெளிவராததே இதன் காரணமாகும். இந்த நாட்டில் தற்போது தமிழ் பேசும் மக்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே அரசியல் பழிவாங்கலுக்கு நல்ல உதாரணமாகும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை எடுத்துக் கொண்டால், கடந்த 28 ஆண்டுகளாக அந்தப் பிரதேச செயலகம் தனியாக இயங்கி வந்தது.

40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். 29 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டிருக்கும் அந்தப் பிரதேச செயலகம் தற்போது தரமிறக்கப்பட்டதாக அறிகின்றோம்.

கல்முனை நகரில் அரசியல் செய்யும் அரசியல்வாதியான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸின் நடவடிக்கையே இதுவாகும். பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டுமே தவிர தரம் இறக்கப்படக் கூடாது. இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் இறக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ், தான் சார்ந்த சமூகத்தில் மரணமானவர்களின் உடலங்கள் எரிக்கப்பட்டிருக்கும் போதே 20ஆவது திருத்தத்துக்கு வாக்களித்து ஆதரவளித்து தனது சமூகத்துக்கே துரோகம் செய்தவர். 

அவர் இன்னொரு சமூகத்துக்கு உதவி செய்வார் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் தமிழர் முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம்.

இதேவேளை, வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் பழிவாங்கப்பட்டு பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். அம்பாறையின் பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை வரையில் பல ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், கௌதம புத்தரின் பௌத்த சின்னங்கள் இருப்பதாகக் அடையாளம் காட்டி நீங்கள் அபகரிக்கின்றீர்கள். எனவே, கடந்த காலங்களில் இந்து மன்னர்கள் வாழ்ந்த, ஆட்சி புரிந்த பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் போன்ற இடங்களில் இந்து சின்னங்கள் இன்னும் இருக்கின்றன. 

அங்கு நூறு ஏக்கர் காணியைக் கொடுத்து இந்து மத ஸ்தாபனம் அமைக்க உங்களால் இடம் தரமுடியுமா” என்று கோவிந்தன் கருணாகரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment