ஜூலை 14 வரை ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட மாட்டார் : உயர் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தினார் சட்டமா அதிபர் - News View

About Us

About Us

Breaking

Friday, April 30, 2021

ஜூலை 14 வரை ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட மாட்டார் : உயர் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தினார் சட்டமா அதிபர்

பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ எதிர்வரும் ஜூலை 14 ஆம் திகதி வரை கைது செய்யப்படமாட்டார் என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றுக்கு இன்று தெரியப்படுத்தினார்.

ஹரின் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனுவொன்று இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி பிரியந்த நாவான இதனைக் கூறினார்.

தம்மை கைது செய்து தடுத்து வைத்து விசாரணை செய்யும் ஏற்பாடொன்று இருப்பதாக சுட்டிக்காட்டிய ஹரின் பெர்னாண்டோ சமீபத்தில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனு எஸ்.துரைராஜா, குமுதினி விக்ரமசிங்க மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவர் கொண்ட நீதியரசர் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை நடத்துவதுடன், பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்வதற்கு முன்பு சட்டமா அதிபரிடம் வினவப்படும் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி பிரியந்த நாவான இதன்போது தெரிவித்தார்.

அது தொடர்பாக சட்டமா அதிபர் தீர்மானமொன்றை எடுப்பதற்கு முன்னர் ஹரின் பெர்னாண்டோவின் சட்டத்தரணிகள் விடயங்களை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் அளிக்க முடியும் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி பிரியந்த நாவான குறிப்பிட்டார்.

எனினும், அந்த உறுதிமொழி போதுமானதல்ல எனவும், தமது கட்சிக்காரர் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறும் ஹரின் பெர்னாண்டோ சார்பில் உயர் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரை ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்படமாட்டார் என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி பிரியந்த நாவான கூறினார்.

மனுவை எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.

No comments:

Post a Comment