இலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் ! இன்று 1,451 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 28, 2021

இலங்கையின் தற்போதைய கொரோனா நிலைவரம் ! இன்று 1,451 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் இலங்கையில் இன்றையதினமே (28) ஆகக்கூடுதலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 661 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொவிட் பரவல் ஆரம்பித்துள்ள ஓராண்டு கடந்துள்ள நிலையில் முதன்முறையாக இன்றையதினம் ஆயிரத்திற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்படுகின்ற பகுதிகளில் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்படுகின்றன. அதற்கமைய இன்று மொனறாகலை, அம்பாறை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன. 

இதேவேளை கொவிட் பரவலால் இன்றையதினம் நாடளாவிய ரீதியிலுள்ள 23 இலங்கை வங்கி கிளைகள் மூடப்பட்டன. மேலும் தனியார் பத்திரிகை நிறுவனமொன்றின் 14 ஊழியர்களுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றும் அதிக தொற்றாளர்கள்
இன்று புதன்கிழமை இரவு 10 மணி வரை மாத்திரம் 1451 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 4938 ஆக அதிகரித்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 95083 பேர் குணமடைந்துள்ளதோடு, 8737 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே நாளில் 1000 இற்கும் அதிக தொற்றாளர்கள்
இலங்கையில் கடந்த ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி சீனப் பெண்ணாருவருக்கு முதன்முதலாக கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதனையடுத்து கடந்த ஒரு வருடத்தில் தொடர்ச்சியாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டாலும் நேற்று செவ்வாய்கிழமை முதன்முறையாக ஆயிரத்திற்கும் அதிக தொற்றாளர்கள் பதிவாகினர்.

அதற்கமைய நேற்று வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 15 பேர் உள்ளடங்கலாக 1111 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் கொழும்பு மாவட்டத்தில் 200 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 198 பேரும் உள்ளடங்குகின்றனர். எஞ்சிய தொற்றாளர்கள் ஏனைய மாவட்டங்களிலிருந்து இனங்காணப்பட்டனர்.

இன்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்
மொனராகலை, அம்பாறை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் இன்று புதன்கிழமை காலை 6 மணி முதல் சில கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கப்பட்டன.

அதற்கமைய மொனராகலை மாவட்டத்தில் வெல்லவாய பொலிஸ் பிரிவில் வெல்லவாய நகர், வெஹெரயாய, கொட்டம்கம்பொக்க கிராம அலுவலர் பிரிவுகளும், புத்தல பொலிஸ் பிரிவில் ரஹதன்கம கிராம அலுவலர் பிரிவும் முடக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் உகன பொலிஸ் பிரிவில் குமாரிகம கிராம அலுவலர் பிரிவும் , மாத்தளை மாவட்டத்தில் நாஉல பொலிஸ் பிரிவில் அலுகொல்ல கிராம அலுவலர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

23 இலங்கை வங்கி கிளைகள் மூடப்பட்டன
இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் இலங்கை வங்கி கிளைகளும் மூடப்பட்டன. அதற்கமைய மேல் மாகாணத்தில் ஹொரண, இரத்மலானை, குருகொட, இங்கிரிய, கொதடுவ, வெலிவேரிய ஆகிய கிளைகளும், மத்திய மாகாணத்தில் திகன மற்றும் கண்டி வைத்தியசாலை கிளையும், வடமத்திய மாகாணத்தில் ரம்பாவ கிளையும், சப்ரகமுவ மாகாணத்தில் கித்துல்கல கிளையும், வடமேல் மாகாணத்தில் வாரியபொல மற்றும், நிக்கவரெட்டிய கிளையும், தென் மாகாணத்தில் காலி மேற்தரக் கிளை, இமதுவ, யக்கலமுல்ல, பெலியத்தை, அம்பாந்தோட்டை, மித்தெனிய கிளைகளும், ஊவா மாகாணத்தில் புத்தல, எதிலிவெவ, அப்புத்தளை, மொனராகலை கிளைகளும் , பிராந்திய கடன் மையம் - பதுளை கிளையும் இவ்வாறு மூடப்பட்டதாக இலங்கை வங்கி அறிவித்துள்ளது.

செவ்வாயன்று 8 மரணங்கள்
நேற்று செவ்வாய்கிழமை 8 கொவிட் மரணங்கள் பதிவாகின. பொல்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய ஆண் ஒருவரும், ஹெட்டிபொல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவரும், மத்துகம பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவரும், நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய ஆண் ஒருவரும், பன்னிப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும், அம்பகஹபலஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவரும், வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவரும், ஸ்ரீஜயவர்தனபுர பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவரும் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தனியார் பத்திரிகை ஊழியர்களுக்கு தொற்று
நாட்டில் தனியார் பத்திரிகை நிறுவனமொன்றில் 14 ஊழியர்களுக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுமாறாக செய்து கொண்ட பரிசோதனைகளில் இவர்களுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக வீதி ஊழியர்களுக்கு தொற்று
அதிவேக வீதியின் கொட்டாவ நுழைவாயிலில் பணியாற்றும் ஊழியர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நேற்று காலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை அதிவேக வீதியின் கொட்டாவ நுழைவாயில், அனைத்து வாகனங்களும் உட்பிரவேசிக்கும் வகையில் திறந்திருக்கும் என அதிவேக வீதி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment