(செ.தேன்மொழி)
தங்கச் சங்கிலி கொள்ளைத் தொடர்பில் கடந்த இரு வார காலப்பகுதியில் சந்தேக நபர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் தங்கச் சங்கிலி கொள்ளைகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று செவ்வாய்கிழமை மாத்திரம் நான்கு கொள்ளைகள் பதிவாகியுள்ளன.
யக்கல, வெல்லவ, வலஸ்முல்ல மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளிலேயே இந்த கொள்ளை பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்கள் ஊடாகவே இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களின் போது பெரும்பாலும் பெண்களே பாதிக்கப்படுகின்றனர். போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களே இது போன்ற கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வரும் நபர்கள் ஏதேனும் விபரங்களை கேட்டறிவது போன்றே தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்டு வருகின்றனர். இவ்வாறு மோட்டார் சைக்கிளில் வரும் நபர்கள் ஏதேனும் வினவினால், பெண்கள் பதிலளிக்கும் போது கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த இரு வார காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் தங்கச் சங்கிலி கொள்ளைத் தொடர்பில் 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்தும் இவ்வாறான கொள்ளைகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.
No comments:
Post a Comment