சிறிதரன் MP யின் வீட்டின் முன்பாக இடம்பெற்ற தாக்குதல் கல்லூரி மாணவர் குழுக்களின் கோஷ்டி மோதல் சம்பவமே, CCTV கமரா மூலம் குற்றவாளிகளை கைது செய்ய ஏற்பாடு - யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விளக்கம் - News View

Breaking

Post Top Ad

Friday, March 26, 2021

சிறிதரன் MP யின் வீட்டின் முன்பாக இடம்பெற்ற தாக்குதல் கல்லூரி மாணவர் குழுக்களின் கோஷ்டி மோதல் சம்பவமே, CCTV கமரா மூலம் குற்றவாளிகளை கைது செய்ய ஏற்பாடு - யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விளக்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீட்டின் முன்னால் இனந்தெரியாத 08 பேர் கொண்ட குழுவினர் நேற்று தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் சிறிதரன் எம்.பியின் மகன்கள் இருவரும் அவரது நண்பரும் வீட்டுக்குள் ஓடி தப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

2020/2021 உயர் தரப்பிரிவில் கற்கும் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட முறுகல் கைகலப்பாக மாறியே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் இரண்டாவது மகனின் நண்பர் ஒருவருக்கும் தாக்குதல் நடத்த வந்த நபர்களுக்குமிடையே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. 

யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது இரு தரப்புக்கும் மீண்டும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறிதரன் எம்.பியின் இரண்டாவது மகன் மூத்த மகனை அழைத்துக் கொண்டு தனது நண்பனுடன் வீட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். 

இவர்களை பின் தொடர்ந்து 04 மோட்டார் சைக்கிளில் வந்த 08 பேர் வாள், கண்ணாடி போத்தல், இரும்புக் கம்பி, பொல்லுகளுடன் வந்து தாக்குதல் நடத்த முற்பட்டனர். 

தாக்குதலிலிருந்து தப்பும் நோக்குடன் வீட்டுக்குள் ஓடியுள்ளனர். ஆத்திரமடைந்த குழுவினர் மோட்டார் சைக்கிளை தாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதல் நடத்த வந்த குழுவினர் சிறிதரன் எம்.பியின் வீட்டைத் தாக்குவதற்காகவோ அல்லது அவரது மகன்மாரை தாக்கும் எண்ணத்துடனோ வரவில்லையென்றும் அவர்கள் சிறிதரன் எம்.பியின் இரண்டாவது மகனின் நண்பரை இலக்கு வைத்து தாக்குவதற்காக வந்ததாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விளக்கமளித்தார்.

எவ்வாறாயினும் இத்தாக்குதல் சம்பவத்துடன் தொர்புடைய 08 பேரும் கைது செய்யப்படவுள்ளனர். 

அவர்கள் வந்த 04 மோட்டார் சைக்கிள்களின் இலக்கங்கள் CCTV கமராக்களில் பதிவாகியுள்ளதை பயன்படுத்தி பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

இத்தாக்குதல் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad