(எம்.மனோசித்ரா)
உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை முழுமையாக பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த பகுதிகளும் மறைக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை முழுமையாக பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த பகுதிகளும் மறைக்கப்படவில்லை.
அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இக்குழு 3 தடவைகள் கூடி அறிக்கையிலுள்ள முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.
கடந்த அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் சுயாதீனமாக முன்னெடுக்கப்பட்டுள்ள அதேவேளை, தற்போதைய அரசாங்கமும் உண்மை காரணிகளை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கும் அரசாங்கத்திற்கும் நேரடி தொடர்புகள் இல்லை. எனினும் அது தொடர்பில் அதிருப்திகள் காணப்பட்டால், அவற்றை முன்வைக்கும் தரப்பினருடன் பேச தயாராகவுள்ளோம்.
அத்தோடு இவ்வறிக்கையின் மூலம் ஏதேனுமொறு கட்சி தாம் பாதிக்கப்படுவதாகக் கருதினால், உச்ச நீதிமன்றத்திற்கு செல்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுமாயின் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
தற்போது அறிக்கை சட்டமா அதிபரிடம் வழங்கப்பட்டுள்ளது. எனவே அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்
No comments:
Post a Comment