(ஆதம்)
கொரோனா வைரஸினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு, நாட்டில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் முயல்வதாக, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவருமான எம்.எம். சுபைர் தெரிவித்தார்.
ஜனாஸா விவகாரம் தொடர்பில் ஓட்டமாவடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (21) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையைில், ஜனாஸா பெட்டிகள் மாத்திரமே எரிக்கப்பட்டதாகவும், அதற்குள் மறைவான விடயங்கள் உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தினால் நாட்டில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. ஜனாஸா பெட்டிகள் மாத்திரம் எரிக்கப்பட்டிருந்தால், அந்த ஜனாஸாக்களுக்கு என்ன நடந்ததென்பதனை அவர் மக்களுக்குச் சொல்ல வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீரின் அண்மைக்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பல்வேறு எதிர்ப்புக்கள் கிளம்பி வருகிறது. அவற்றைச் சமாளிப்பதற்காகவே, அவர் இவ்வாறான கருத்துக்களைக்கூறி வருகிறார்.
முஸ்லிம்களுடைய ஜனாஸாக்கள் நெருப்பில் எரிந்த போது, முஸ்லிம் சமூகம் பட்ட துன்பங்கள் வேதனைகள் ஏராளம்.
ஜனாஸா அடக்கத்தின் பின்னர் முஸ்லிம் சமூகம் தற்போது சற்று ஆறுதலடைந்துள்ள நிலையில், சிறுபிள்ளைத்தனமாக அறிக்கைகளை விட்டு, பெரும்பான்மைச் சமூகத்தை தூண்டி விடுகிறார். நாட்டையும் மக்களையும் குழப்புகின்ற இவ்வாறான செயற்பாடுகளை அவர் கைவிட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் செல்வாக்கிழந்து வரும் ஹாபிஸ் நஸீர், அந்தச் செல்வாக்கினை மீளக்கட்டியெழுப்புவதற்காகவே ஜனாஸா விவகாரத்தினைக் கையிலெடுத்து போலியான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். ஜனாஸா அடக்கத்தில் அரசியல் இலாபம் தேட முயன்று இன்று சிக்கலில் மாட்டியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலின் போது ராஜபக்ஷ குடும்பத்தை, முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இனவாதிகளாகக் காட்டி, மிக மோசமாக பிரசாரம் செய்து வாக்குகளைச் சூறையாடிய ஹாபிஸ் நஸீர், இப்போது ராஜபகஷக்களைப் புகழ் பாடுவது பதவிகளுக்காகவேயன்றி வேறெதுவுமில்லை.
ஜனநாயகத்துக்கும், சமூகத்திற்கும் ஹாபிஸ் நஸீர் ஆபத்தானவர். அவருக்கு வாக்களிக்க வேண்டாமென கடந்த பொதுத் தேர்தலின் போது மட்டக்களப்பு மாவட்ட மக்களிடம் கோரிக்கை விடுத்தோம். யாரும் எமது கருத்துக்களுக்கு செவிசாய்க்கவில்லை. அதனால் இன்று அவர் சார்ந்த கட்சிக்கும் தலைமைக்கும் ஆபத்தாக மாறி விட்டார்.
படித்துப்படித்துச் சொன்னோம். ஹாபிசுக்கு வாக்களிக்காதீர்கள் என்று வாக்களித்தீர்கள் இன்று அனுபவிக்கிறீர்கள். அர்ப்பசொற்ப சலுகைகளுக்கும், பசப்பு வார்த்தைகளுக்கும் ஏமாற்றமடைந்து வாக்களித்ததனால் இன்று ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் வெட்கித்தலை குனிந்துள்ளது. பதவிகளுக்காக பொய்களைக்கூறி சமூகத்தை ஏமாற்றுகின்ற ஹாபிஸ் நஸீருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
ஜனாஸா பெட்டிகள் மாத்திரமே எரிக்கப்பட்டதாகவும், அதற்குள் மறைவான விடயங்கள் உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் தெரிவித்த கருத்தினால் இனவாதிகள் நீதிமன்றத்தை நாடுகின்ற நிலைமைகள் ஏற்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment