ஜனாதிபதியால் சுட்டிக்காட்டப்பட்ட போலி முகப்புத்தக கணக்கு - குற்றப் புலனாய்வு பிரிவில் ஜே.வி.பி முறைப்பாடு - News View

About Us

About Us

Breaking

Sunday, March 21, 2021

ஜனாதிபதியால் சுட்டிக்காட்டப்பட்ட போலி முகப்புத்தக கணக்கு - குற்றப் புலனாய்வு பிரிவில் ஜே.வி.பி முறைப்பாடு

(எம்.மனோசித்ரா)

'ஜே.வி.பி. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்' என்ற பெயரில் போலியான முகப்புத்தக கணக்கு உருவாக்கப்பட்டு அதன் ஊடாக போலிச் செய்திகள் பரப்பப்படுவதாகத் தெரிவித்து இன்று ஞாயிறுக்கிழமை மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சட்டத்தரணி சுனில் வடகல ஆகியோரால் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று சனிக்கிழமை பங்குபற்றிய கிராமத்துடன் கலந்துரையாடல் செயற்திட்டத்தின்போது 'ஜே.வி.பி. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்' என்ற முகப்புத்தக கணக்கில் சுற்றுச்சூழல் அழிப்பு தொடர்பாக போலியான செய்திகள் வெளியிடப்படுவதாகத் தெரிவித்து, ஜே.வி.பி. தொடர்பில் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

குறித்த முகப்புத்தக கணக்கு தொடர்பில் இன்றையதினம் குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடளித்ததன் பின்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நுவரெலியாவில் கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்து தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடளித்துள்ளோம்.

இதன்போது 'ஜே.வி.பி. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்' என்ற முகப்புத்தக கணக்கின் ஊடாக போலியான செய்திகள் பரப்பபடுகின்ற என்று ஜனாதிபதி தெரிவித்தார். எனினும் இந்த முகப்புத்தக கணக்கிற்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

இந்த கருத்தை கோட்டாபய ராஜபக்ஷ என்ற தனியொரு நபர் தெரிவித்திருந்தால் நாம் முறைப்பாடளித்திருக்க மாட்டோம். எனினும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி நாட்டு மக்கள் மத்தியில் ஊடகங்கள் மத்தியில் இவ்வாறான கருத்தை தெரிவித்தமையால் நாம் முறைப்பாடளித்துள்ளோம்.

இந்த முகப்புத்தக கணக்கு கடந்த 6 தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 'ஜே.வி.பி. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்' என்று இந்த கணக்கு ஆரம்பிக்கப்பட்டிருந்ததால், ஜே.வி.பி. ஊடகப்பிரிவு இது தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்திற்கு கடந்த 18 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. அதனையடுத்து 19 ஆம் திகதி குறித்த கணக்கு பேஸ்புக் நிறுவனத்தினால் முடக்கப்பட்டது.

இவ்வாறு போலிக் கணக்கு என உறுதிப்படுத்தப்பட்டு பேஸ்புக் நிறுவனத்தினால் முடக்கப்பட்ட கணக்கில் இடப்பட்ட பதிவுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு காண்பித்து ஜே.வி.பி. போலிச் செய்திகளை பரப்புவதாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பான உண்மை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். காரணம் இந்த கணக்கு நிதி வழங்கி உருவாக்கப்பட்டிருப்பதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே இது தொடர்பில் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறின்றி எம்மால் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளைப் போல இந்த முறைப்பாடும் புறந்தள்ளப்படுமாயின் இது ஜனாதிபதி மற்றும் அவரின் ஊடகப்பிரிவிற்கு தெரிந்தே முன்னெடுக்கப்பட்ட செயற்பாடு என்ற முடிவிற்கு வர வேண்டியேற்படும்.

No comments:

Post a Comment