சீனியால் ஏற்பட்ட நட்டத்தை ஆராய தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ள வேண்டும் - நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்தது ஐக்கிய மக்கள் சக்தி - News View

Breaking

Post Top Ad

Thursday, March 11, 2021

சீனியால் ஏற்பட்ட நட்டத்தை ஆராய தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ள வேண்டும் - நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்தது ஐக்கிய மக்கள் சக்தி

(எம்.ஆர்.எம்.வசீம்)

இறக்குமதி செய்யப்படும் சீனிக்காக கிலாே ஒன்றுக்கு ரூபா 25 சதம் வரை வரி குறைக்க தீர்மானிக்கப்பட்டதால் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கும் நட்டம் தொடர்பாக தடயவியல் கணக்காய்வொன்றை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த கோரிக்கை தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷடி சில்வா தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்படும் சீனி ஒரு கிலாேவுக்கான வரியை ரூபா 25 சதம் வரை குறைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தால் அரசாங்கத்துக்கு 15.9 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. 

அதனால் ஏற்பட்டிருக்கும் இந்த நட்டம் தொடர்பாக தடயவியல் கணக்காய்வொன்றை மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.

சீனி இறக்குமதி செய்வதற்கு ரூபா 25 சதம் வரை வரி குறைக்கப்பட்டதால் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி முதல் கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி வரை அரசாங்கத்துக்கு கிடைக்க இருந்த ஆயிரத்தி 600 கோடி ரூபா வருமானம் இல்லாமலாகி இருப்பதாக நிதி தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவுக்கு நிதி அமைச்சு சர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சீனி இறக்குமதி வரி குறைப்பினால் அரசாங்கத்துக்கு 15.9 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சு கணக்கு பார்த்திருக்கின்றபோதும், உண்மையான நட்டத்தை கணக்கு பார்ப்பதற்காக தடயவியல் கணக்காய்வு ஒன்றை மேற்கொள்ளுமாறு கேட்டிருக்கின்றோம்.

அத்துடன் சீனி இறக்குமதியால் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கும் நட்டம் தொடர்பாக பாராளுமன்ற விவாதம் ஒன்றையும் நாங்கள் கோர இருக்கின்றோம். அத்துடன் இந்த வரி திருத்தத்தை மேற்கொள்ளுமாறும் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad