நுவரெலியாவில் தீ விபத்து - 16 தொழிலாளர்களின் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை - வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்களும் சேதம் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 11, 2021

நுவரெலியாவில் தீ விபத்து - 16 தொழிலாளர்களின் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை - வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்களும் சேதம்

நுவரெலியா - இராகலை தோட்டம் 2ம் பிரிவில், 16 வீடுகளைக் கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகின.

குறித்த வீடுகளில் குடியிருந்த 14 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 26 பேரும், பெண்கள் 32 பேரும், 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 3 பேரும் அடங்குகின்றனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கும் தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கப்பட்டது. இதற்கமைய சம்பவ இடத்துக்கு விரைந்த நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர், மக்களுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் அப்பகுதியில் மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளியை பின்பற்றி உரிய வகையில் இருக்குமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது.

இந்த தீவிபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும், பெருமளவில் பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன என்று மக்கள் தெரிவித்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, தோட்டத்திலுள்ள ஆலயத்தில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் அவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் நுவரெலியா பிரதேச சபை ஆகியன ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் இராகலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment