தீவிரவாதத்தை ஊக்குவிக்க முயன்ற குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Thursday, March 25, 2021

தீவிரவாதத்தை ஊக்குவிக்க முயன்ற குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது

சமூக வலைத்தளங்கள் ஊடாக தீவிரவாத சித்தாந்தங்களை பரப்பியமை மற்றும் இந்நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இரு சந்தேகநபர்களை, பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (TID) நேற்று (25) கைது செய்துள்ளனர்.

மாத்தளை மற்றும் காத்தான்குடி பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மாத்தளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட 46 வயது சந்தேகநபர், கடந்த வருடம் டிசம்பர் 05ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும், அவர் அந்நாட்டில் தீவிர மதவாத சிந்தனைகளை பரப்பியமை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பிலேயே அங்கிருந்து நாடு கடத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர் இலங்கையில் தீவிர மதவாதம், மற்றும் தீவிரவாத சிந்தனைகளை பரப்புவதற்காக, அமீரகத்திலுள்ள இலங்கையர்களிடம் நிதி திரட்டியுள்ளதாகவும், சமூக வலைத்தளங்களில் அது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன், காத்தான்குடி பிரதேசத்தில் 49 வயதான நபர் ஒருவரை பயங்கரவாத விசாரணை பிரிவினர் (TID) நேற்று (25) கைது செய்துள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் வஹாப் கொள்கை, மற்றும் தீவிர மதவாத கொள்கைகளை பரப்பியமை தொடர்பிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கி பழகிய ஒருவர் எனவும், ஸஹ்ரான் நடாத்திய பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சந்தேகநபர்கள் இருவரும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், பயங்கரவாத விசாரணை பிரிவில் (TID) தடுத்து வைத்து விசாரிக்கப்படுவார்கள் எனவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் TIDயினர் முன்னெடுத்து வருவதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad