தமிழர்கள் மீதான போர்க்குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கு அநீதியிழைக்கும் நிலைப்பாட்டை இந்தியா ஒருபோதும் எடுத்துவிடக் கூடாது என்று திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணைகளுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியின் முன்னெடுப்பு தேவை என்றும், எனவே இன்று திங்கட்கிழமை ஐ.நா. வில் இலங்கை மீதான தீர்மானத்துக்கு ஆதாரவராக இந்தியா வாக்களிப்பதோடு, அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு பிரதமர் மோடி நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக 6 நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. இந்நிலையில் ஐ.நா.வில் இந்தியா இலங்கைக்கு சார்பான தீர்மானத்தை எடுக்கும் என்று இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் இதனை வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வாக்கெடுப்பில் இந்தியா தமக்கு சார்பாக வாக்களிக்கும் என்று இலங்கை அறிவித்துள்ள நிலையில் , இவ்விடயத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மௌனம் தமிழர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் செயலாளர் கூறியுள்ள கருத்துக்கள் தொடர்பில் எவ்வித நிலைப்பாட்டையும் அறிவிக்காமல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பது உலகத் தமிழர்கள் மற்றும் தமிழக மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது ஈழத்தமிழர்கள் மீதான அக்கறையுடன் பேச்சுவார்த்தை நடத்தியதற்கான எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. அத்தோடு கடந்த வாரம் இந்திய பிரதமர் மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாலிலும் இவ்விவகாரம் தொடர்பில் பேசப்பட்டதாக எவ்வித செய்திகளும் வெளிவரவில்லை.
உலக வாழ் தமிழர்களின் அனைவரும் இந்தியாவின் நிலைப்பாட்டை பதற்றத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது , இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பில் இலங்கை வெளியுறவுச் செயலாளர் தீர்மானிப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசு அனுமதியளித்திருப்பது கவலைக்குரியது. முக்கியமான இந்தப் பிரச்சினையில் பா.ஜ.க. அரசு அக்கறை காட்டாமல் இருப்பது, தமிழர்களை அலட்சியப்படுத்தும் அணுகுமுறையின்பாற்பட்டதாகும். இந்தியாவின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்களை வஞ்சிப்பதை உலக வாழ் 9 கோடி தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
ஐ.நா மனித உரிமை பேரவையில் ஏற்கனவே நடைபெற்ற வாக்கெடுப்புகளில் இந்தியா இலங்கைக்கு எதிராகவே வாக்களித்துள்ளது என்பதைக் கூட பா.ஜ.க. அரசு ஏன் மறந்தது என்ற கேள்வி எழுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஏற்கனவே பிரதமருக்குக் கழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்ட கடிதத்தை அனுப்பியுள்ளோம். அதில், 'ஈழத்தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சென்றிட ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறும், ஏனைய உறுப்பு நாடுகளின் ஆதரவினையும் திரட்டுமாறும் ' கோரிக்கை விடுத்திருந்தோம்.
தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கும் பிரதமர் மோடி செவிசாய்க்காமல், போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கத் திட்டமிடுவது, தமிழ் இனத்திற்கு முற்றிலும் எதிரானதும் மிகுந்த கண்டனத்திற்குரியதுமாகும். இலங்கையின் நிர்ப்பந்தத்திற்கு இந்தியா அடிபணிவது ஏன் என்ற ஆதங்கமும் ஆத்திரமும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் எழுகிறது.
எனவே ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. மன்றத்தில் இன்று திங்கட்கிழமை எடுத்துக் கொள்ளப்படுகின்ற தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது மட்டுமின்றி, இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சென்றிடும் வகையில் உறுப்பு நாடுகளின் ஆதரவினையும் திரட்டி உரிய திருத்தங்களுடன் அந்தத் தீர்மானம் நிறைவேறிட பிரதமர் மோடி நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இலங்கைத் தமிழர்களை அவமதித்து, அவர்களுக்கு அநீதி இழைத்து, இலங்கை அரசின் கொடுங்கோன்மைக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுத்திட வேண்டாம் என்றும், தமிழ் மக்களின் நிரந்தரமான பழிச்சொல்லுக்கு ஆளாகிட வேண்டாம் என்றும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என்றும் அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment