உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால் பல உண்மைகளை வெளிப்படுத்திக் கொள்ளலாம் - பேராசிரியர் ஆசுமாரசிங்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 2, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால் பல உண்மைகளை வெளிப்படுத்திக் கொள்ளலாம் - பேராசிரியர் ஆசுமாரசிங்க

(எம்.ஆர்.எம்.வசீம்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கையை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது பாரிய சந்தேகமாகும். தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால் தாக்குதல் தொடர்பான பல உண்மைகளை வெளிப்படுத்திக் கொள்ளலாம் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற்றிருக்கின்றது. பூரணப்படுத்தப்படாத அறிக்கையாகவே அதனை நாங்கள் காண்கின்றோம். இருந்தபோதும் அந்த அறிக்கையில் தாக்குதலுக்கான பின்னணி, அதன் சூத்திரதாரிகள் தொடர்பான எந்த தகவலும் இல்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஆரம்பமாக பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைத்து பகிரங்க விசாரணை மேற்கொண்டிருந்தோம். ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கி இருந்தோம். ஒரு சில சந்தர்ப்பங்களில் ஊடங்களுக்கு அனுமதி இல்லாமல் சில வாக்குமூலங்களை பெற்றிருந்தோம். 

தெரிவுக்குழுவின் உறுப்பினர் என்ற வகையில் அதில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து சாட்சியங்களும் எமக்கு தெரியும். தெரிவுக்குழுவின் விசாரணையில் பல விடயங்கள் வெளியில் வர ஆரம்பித்தவுடன்தான் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தார்.

பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணையின்போது வெளிவந்த பிரதான விடயம்தான் சஹ்ரான் தொடர்பாக மேற்கொண்டு வந்த விசாரணை இடையில் நிறுத்தப்பட்டதாகும். சஹ்ரான் தொடர்பான விசாரணைகளை பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா மேற்கொண்டு வந்திருந்தார். 

இதன்போதுதான் நாமல் குமார என்ற ஒரு நபர் ஊடகங்களுக்கு முன்னால் வந்து, நாலக்க சில்வாவை கைது செய்ய வேண்டும் என்ற நாடகம் முக்கியமானதாகும். சஹ்ரான் தொடர்பான விசாரணை இடைநிறுத்தப்பட்டதானது, தாக்குதலை தடுக்க முடியாமல் போனதற்கு பிரதான காரணமாகும்.

அதேபோன்று சஹ்ரானுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தவறியமை தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளிடம் தெரிவுக்குழு விசாரணை மேற்கொண்டபோது, அவர்களால் ஏற்பட்ட தவறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டிருந்தனர். 

இது போன்ற பல முக்கியமான தவகல்கள் தெரிவுக்குழுவின் விசாரணைகளின் போது வெளிவந்திருந்தன. ஆனால் ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து உண்மையான குற்றவாளிகள் மறைக்கப்பட்டிருக்கின்றனர்.

எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் இருப்பது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. 

அதனால் தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள, கர்தினால் மெல்கம் ரன்ஜித் மற்றும் பாதிகப்பட்டவர்கள் அரசாங்கத்துக்கு இது தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment