இலங்கை அரசாங்கம் முறையான வழியில் பயணிக்காவிடின் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை, மீன் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது - வஜிர அபேவர்தன - News View

Breaking

Post Top Ad

Friday, March 26, 2021

இலங்கை அரசாங்கம் முறையான வழியில் பயணிக்காவிடின் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை, மீன் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது - வஜிர அபேவர்தன

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிவர்த்தி செய்து கொள்வது ஒரு வருடம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் இலங்கை முறையான பாதையில் பயணிக்கா விட்டால் மீண்டும் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை அற்றுப்போகும் அதேவேளை, இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இம்முறை இலங்கை தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட பல வந்த நாடுகளின் ஆதரவை தனது ஆட்சியின் போது பெற்றுக் கொள்வதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறந்த இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே வஜிர அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை வெற்றி கொள்வதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் அன்று எடுக்கப்பட்ட நடவடிக்கை ஊடாக எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு ஆடைத்துறைக்கான ஜீ.எஸ்.பி. வரிச் சலுகை நீக்கப்படும் அபாயம் ஏற்படாது.

நல்லாட்சி அரசாங்கத்தில் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த போது 2017 இல் பிரேசிலில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் கலந்து கொண்டன் பின்னர், ஒரே வருடத்தில் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை 5 ஆண்டுகளுக்கு நீடித்துக் கொள்ள நடவடிக்கை எடுத்தார்.

அது மாத்திரமின்றி ஐரோப்பாவினால் இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிக் கொள்வதற்கும் இதன்போது ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

இம்முறை இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட பலவந்த நாடுகளின் ஆதரவையும் அன்று பெற்றுக் கொள்வதற்கு சிறந்த இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்திருந்தார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஐ.நா.வில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிவர்த்தி செய்து கொள்ள ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஐ.நா. கூர்மையாக அவதானித்து வருகிறது.

எனவே இலங்கைக்கு ஐ.நா. வழங்கியுள்ள குறித்த காலகட்டத்தில் அரசாங்கம் முறையான வழியில் பயணிக்காவிடின், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீளப் பெற்றுக் கொடுத்த ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை மீண்டும் இழக்கும் அதேவேளை, ஐரோப்பாவினால் மீண்டும் மீன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கக்கூடிய வாய்ப்புள்ளது என்றும் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad