ஜனாதிபதியொருவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரமும் கிடையாது : தயாசிறி ஜயசேகர - News View

About Us

About Us

Breaking

Friday, March 26, 2021

ஜனாதிபதியொருவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரமும் கிடையாது : தயாசிறி ஜயசேகர

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்தோடு முன்னாள் ஜனாதிபதிக்கு இவ்விவகாரத்தில் ஏதேனும் அநீதி இழைக்கப்படுமாயின் அதற்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் கொழும்பு 10, டாலி வீதியில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் மத்திய குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிரதானமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதோடு, மாகாண சபைத் தேர்தல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய குழுக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுதந்திரக் கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. பாராளுமன்றத்திலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்திருக்கின்றோம்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஏதேனும் அநீதி இழைக்கப்படுமாயின் அது தொடர்பில் முன்னெடுனக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். எனவே யாரும் இது குறித்து வீண் கலவரமடையத் தேவையில்லை. 

ஜனாதிபதியொருவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரமும் கிடையாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், மாகாண சபைத் தேர்தல் தொடர்பான சட்ட மூலம் குறித்து அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் மத்திய செயற்குழுவை கூட்டி கலந்தாலோசிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

எவ்வாறிருப்பினும் கட்சியை மேலும் வலுப்படுத்தும் வகையிலான தீர்மானங்களே எடுக்கப்படும்.

எம்மால் ஸ்தாபிக்கப்பட்ட தற்போதைய அரசாங்கத்தில் குறைபாடுகள் காணப்படலாம். அவற்றை நிவர்த்தி செய்து முன்னோக்கி பயணிக்க வேண்டும். 

எனவே கூட்டணியாக தொடர்ந்தும் செயற்படவே எதிர்பார்த்துள்ளோம். எனினும் இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான எந்தவொரு தீர்மானத்தையும் எடுப்பதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment