(எம்.மனோசித்ரா)
நாட்டில் தற்போது சுற்றாடல் பாதிப்பு இடம்பெறுவதில்லை என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. சூழலுக்கு ஏற்படுத்தப்படும் அழிவுகளை நேரில் காண்பவர்களே அதைப்பற்றி கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இவ்வாறு கருத்து தெரிவிப்பவர்கள் தற்போது தேசத்துரோகிகளைப் போன்றும், தீவிரவாதிகளைப் போன்றும் பார்க்கப்படுகின்றனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் பேசுபவர்கள் தேசத்துரோகிகளைப் போன்றும் தீவிரவாதிகளைப் போன்றும் பார்க்கப்படுகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் மாத்திரமின்றி நாட்டிலுள்ள சகலரும் நேரடியாக சுற்றாடலுக்கு ஏற்படுத்தப்படும் பாதிப்பை அவதானிக்கின்றனர். எனவேதான் அதனைப் பற்றி பேசுகின்றனர். எனவே சூழல் பாதுகாப்பு தொடர்பில் கருத்து வெளியிடுபவர்களின் குரலை முடக்க முடியாது.
இதேவேளை நாட்டு மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
எனவே மக்களின் பாவனைக்கு உகந்த சிறந்த தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்யுமாறு வலியுறுத்துகின்றோம். அதனை விடுத்து வாகனங்களுக்கு உபயோகிக்கும் எரிபொருள் போன்ற எண்ணெய்யை இறக்குமதி செய்வதை அனுமதிக்க முடியாது.
இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது பொறுப்புடைய எதிர்க்கட்சியாக மக்கள் சார்பில் நின்றி அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டுவோம்.
இது போன்ற பாரதூரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது அரசாங்கம் அவற்றை மறைப்பதற்கு ஏன் முயற்சிக்கிறது என்ற கேள்வி எழுகிறது.
இவ்வாறான செயற்பாடுகளை மக்கள் போராட்டத்தின் ஊடாக தடுக்க முடியும். எனவே அத்தகைய போராட்டத்தில் எம்முடன் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
இலங்கை வரலாற்றில் மிக மோசமான சித்திரைப் புத்தாண்டு இம்முறை கொண்டாடப்படவுள்ளது. காரணம் மக்களின் வாழ்க்கை செலவு என்றுமில்லாதவாறு பாரியளவில் அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment