முஸ்லிம்கள் மீதான மூளைச்சலவை ஆரம்பமாகின்றது - News View

About Us

About Us

Breaking

Monday, March 22, 2021

முஸ்லிம்கள் மீதான மூளைச்சலவை ஆரம்பமாகின்றது

ஜனா­தி­பதி நந்­த­சேன கோத்­தா­பய ராஜ­பக்­சவின் பாது­காப்பு அமைச்சி­லி­ருந்து சுங்கத் திணைக்­க­ளத்­தி­னூ­டாக வெளி­யா­கிய ஓர் அறி­விப்­பின்­படி இலங்­கைக்குள் நுழையும் இஸ்லாம் சம்­பந்­த­மான நூல்கள், வெளி­யீ­டுகள் யாவும் இனிமேல் பாது­காப்பு அமைச்­சினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்­டு­மென்று கூறப்­பட்­டுள்­ளது. 

இந்த அறி­விப்பின் பிர­காரம் இஸ்­லாத்­தைப்­ பற்றி முஸ்லிம் வாசகர்களும் மாண­வர்­களும், பொது­வாக யாவரும், எவ்­வா­றான புத்த­கங்­க­ளையும் கட்­டு­ரை­க­ளையும் படிக்­க­ வேண்டும் என்பதையும், அதற்கும் மேலாக எவ்­வாறு அவர்கள் இஸ்­லாத்­தைப் பற்றிச் சிந்­திக்க வேண்டும் என்­ப­தையும் ஜனா­தி­ப­தியின் பாது­காப்பு அமைச்சே இனிமேல் தீர்­மா­னிக்கும். 

எதை ஒருவர் வாசிக்க வேண்டும் என்­பதை அர­சாங்­கமே தீர்மானிப்பது என்றால் எப்­படிச் சிந்­திக்க வேண்டும் என்­ப­தையும் எப்­படி எழுத வேண்டும் என்­ப­தையும் அர­சாங்­கமே தீர்மானிப்பதாகாதா? என­வேதான் ஜனா­தி­ப­தியின் இஸ்­லா­மிய நூல்கள் பற்­றிய இந்த முடிவை இலங்கை முஸ்­லிம்­களின் மூளைச்சல­வையின் ஆரம்பம் எனக் கரு­தலாம்.

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தை ஒழிப்­ப­தற்கு முஸ்­லிம்­களை மூளைச்­ச­லவை செய்­ய­ வேண்டும் என்ற கோரிக்கை நந்­த­சேன கோத்­தா­பய ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்­னரே சில பௌத்த துற­வி­களால் நல்­லாட்­சிக்­ கா­லத்தின் இறுதி நாட்­க­ளிலே அர­சாங்­கத்­திடம் முன்­வைக்­கப்­பட்­டது. 

அந்தத் துற­வி­களுட் சிலர் இன்று ஜனா­தி­ப­தியின் செவி­க­ளுக்கு அருகே குந்­திக்­கொண்டு மந்­தி­ரா­லோ­சனை கூறு­கின்­றனர். அந்த ஆலோ­ச­னை­களின் வெளிப்­பா­டு­களுள் ஒன்றே இஸ்­லா­மிய புத்தகங்க­ளுக்­கான கட்­டுப்­பாடு. இதற்கு உட­னடிக் கார­ண­மாக அமைந்­துள்­ளது உயிர்த்த ஞாயிறு குண்­டு ­வெ­டிப்புச் சம்­பவம் பற்­றிய ஜனா­தி­பதி ஆணைக் குழுவின் அறிக்கை.

அதிலே வஹா­பித்­துவம், சல­பித்­துவம், மத அடிப்­ப­டை­வாதம் போன்ற கொள்­கை­களைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டு­மெனப் பொது­வாக சிபார்சு செய்­யப்­பட்­டுள்­ளது. ஆனால் அவற்­றைப் ­பற்­றிய ஆழ­மான விளக்­கங்கள் அந்த அறிக்­கையில் இல்லை. 

எனவே அவற்­றைப் பற்றிய ஆராய்ச்­சி­க­ளை­யெல்லாம் ஒதுக்­கி­விட்டு ஒட்­டு­ மொத்­த­மாக இஸ்­லா­மிய நூல்­களின் வரு­கையைக் கட்டுப்படுத்­தினால் அவையெல்லாம் தீர்ந்து விடும் என்ற எண்ணத்தி­லேயே அரசாங்கத்தின் மேற்­கூ­றிய அறி­விப்பு அமைந்துள்­ளது. 

அதன் அடுத்த கட்­ட­மாக உள்­நாட்­டி­லி­ருந்து வெளி­யாகும் இஸ்­லா­மிய நூல்­க­ளும்­கூட பாது­காப்பு அமைச்சின் அனு­ம­தி­யு­ட­னேயே வெளியிடப்­பட வேண்­டு­மெனக் கட்­டளை பிறந்­தாலும் ஆச்சரியமில்லை.

இதை­வி­டவும் முக்­கி­ய­மான இன்­னொரு உட­னடிக் கார­ணமும் உண்டு. இந்த அறி­விப்பு, ஜனா­ஸாக்­களை அடக்­குதல் பற்­றிய போராட்­டத்தில் முஸ்­லிம்கள் வெற்றி கண்­டுள்ள சூழலில் இஸ்­லா­மிய புத்­தகக் கட்­டுப்­பாடு ஒரு புதிய பிரச்­சி­னை­யாகத் தோற்றம் எடுத்துள்­ளது.

கொரோ­னாவால் மர­ணித்த முஸ்லிம் உடல்­களை ஒரே நாடு ஒரே சட்டம் என்ற போர்­வையில் எரிக்­கவே வேண்­டு­மென விடாப்­பி­டி­யாக நின்­ற­வர்கள் ஜனா­தி­ப­திக்குப் பக்­க­ப­ல­மாக உள்ள பௌத்த பேரினவா­திகள். அவர்­க­ளது முக்­கிய நோக்­கமே முஸ்லிம் சமூ­கத்தை எப்­ப­டி­யா­வது நசுக்கித் தமது இனத்­துக்கு குற்­றேவல் புரியும் ஓர் இனமாக மாற்­று­வதே. 

இதற்­காகப் பல இடைஞ்­சல்­களை முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­ப­டுத்த அவர்கள் தயங்­க­மாட்­டார்கள். அந்த இடைஞ்­சல்­களுள் ஒன்­றுதான் ஜனாஸா அடக்­குதல் பற்­றிய பிரச்­சினை. அதிலே அவர்கள் தோல்வி கண்­டு­விட்­டாலும் அடுக்­க­டுக்­காக முஸ்­லிம்­களைத் துன்­பு­றுத்­தக் கூடிய பல இடைஞ்­சல்கள் அவர்­களின் பாச­றைக்குள் உண்டு. அந்த வகையில் வெளி­யா­னதே இஸ்­லா­மிய புத்­த­கங்­க­ளுக்­கான கட்டுப்பாடு. இதைப்­பற்றிச் சற்று விரி­வான விளக்கம் தேவை.

உல­கத்தின் நூல் வெளி­யீட்டுச் சந்­தையில் இஸ்­லாத்­தைப் ­பற்­றிய நூல்கள் நாள்­தோறும் பல மொழி­களில் வெளி­வந்து கொண்டிருக்கின்­றன. அந்த நூல்கள் மதம், அர­சியல், பொருளாதாரம், தத்­துவம், இலக்­கியம், மருத்­துவம், விஞ்­ஞானம், கட்டி­டக்­கலை, இசை என்­ற­வாறு பல துறை­களைச் சார்ந்­தவை. 

அந்த நூல்­களுள் மரபு வழி­யி­லான இஸ்­லா­மிய கருத்­துக்­களும், தர்க்க ரீதி­யான கருத்­துக்­களும், யதார்த்­த­பூர்­வ­மான கருத்­துக்­களும், புரட்­சி­க­ர­மான கருத்­துக்­களும் அடங்கும். இவ்­வா­றான நூல்கள் இலங்­கைக்குள் நுழை­யும்­போது அவற்றை வாசித்து விளங்கி எதை நுழைய விடலாம், எதைத் தவிர்க்­கலாம் என்று தீர்­மா­னிக்க அந்தத் துறை­களில் பாண்­டித்­தியம் பெற்ற ஒரு குழு தேவை­யல்­லவா? அப்படிப்­பட்ட ஒரு குழு பாது­காப்பு அமைச்சில் உண்டா? அப்­படி இல்லாமல் இஸ்லாம் என்ற தலைப்பை மட்டும் நூல் அட்­டையில் பார்த்­து­ விட்டுத் தீர்­மா­னிப்­பது எப்­படி நியா­ய­மாக இருக்க முடியும்?

ஒவ்வோர் அறி­வுத்­து­றை­யிலும் பல்­வேறு விட­யங்­க­ளைப்­ பற்­றிய பல்வேறு கருத்­துக்கள் நில­வு­வது சகஜம். மதங்­களும் அதற்கு விதிவிலக்­கல்ல. அவற்றுள் எது சரி­யா­னது எது தவ­றா­னது என்­பதை அறி­வ­தற்கு பல தரப்­பட்ட கருத்­துக்­களை முதலில் படிக்க வேண்டும். 

கருத்­துக்கள் மோது­வ­தன்­ மூ­லமே அறிவு விசா­ல­ம­டையும். சமூ­கமும் அறி­வு­டைய சமூ­க­மாக வளரும். ஒருவர் ஒரு புதிய கருத்தை அறிமுகப்­ப­டுத்­தும்­போது அவ­ருக்கு பழைய கருத்­துக்­க­ளைப்­ பற்­றிய விளக்கம் தெரிந்­தி­ருக்க வேண்டும். அது இல்­லாமல் எவ்­வாறு அவர் தனது கருத்தைப் புதி­தென்று வாதாட முடியும்? 

உதா­ர­ண­மாக, வஹா­பி­யத்தை நிரா­க­ரிக்கும் ஒருவர் வஹா­பிய நூல்களை வாசித்து விளங்­காமல் எப்­படி அதனை நிரா­க­ரிக்க முடியும்? ஆகவே வஹா­பிய நூல்­க­ளுக்குத் தடை­ வி­தித்தால் அது வஹா­பி­யத்தை நிரா­க­ரிக்கும் நூல்­க­ளையும் வெளி­வ­ராது தடுப்பதற்குச் சமன். 

எனவே ஒரு ஜன­நா­யக சமூ­கத்­துக்கு கருத்துச் சுதந்­திரம் அவ­சியம். கருத்துச் சுதந்­திரம் நிலவ வாசிப்புச் சுதந்­திரம் இன்­றி­ய­மை­யா­தது. நூல்­க­ளுக்கு அரசு தணிக்கை விதித்தால் அது கருத்துச் சுதந்திரத்தையே தடை செய்­வ­தாகும்.

1970 களிலும் 1980 களிலும் இடம்­பெற்ற மக்கள் விடு­தலை முன்னணியின் கிளர்ச்­சிகள் மாக்­சிய கருத்­துக்­களால் உந்தப்பட்டவை. அதனால் அப்­போ­தி­ருந்த அர­சுகள் மக்­சிய கம்யூனிச நூல்கள் நாட்­டுக்குள் நுழை­வதைத் தடை செய்­ய­வில்லை. 

இப்­போது, ஒரு சில முஸ்லிம் தீவி­ர­வா­திகள் இஸ்­லாத்தின் பெயரில் நூற்­றுக்­க­ணக்­கான அப்­பாவி கிறிஸ்­தவப் பக்­தர்­களை கொன்று குவித்­தனர் என்­ப­தற்­காக இஸ்­லா­மிய நூல்­க­ளையே தணிக்கை செய்­வது எவ்­வாறு பொருந்தும்?

இஸ்லாம் தீவி­ர­வா­தத்தை வளர்க்­கின்­றது என்று சொல்­லித்­தானே சீன அரசு அங்­குள்ள உய்கர் முஸ்­லிம்­களை முகாம்­க­ளுக்குள் சிறைப்­ப­டுத்தி மூளைச் சலவை செய்­கின்­றது. அதன் நோக்­கமே உய்கர் முஸ்­லிம்­களின் மூளை­யிலே இஸ்­லாத்­தைப்­ பற்­றிய எந்தச் சிந்­த­னையும் இருக்­கக்­கூ­டாது என்­பதே. 

அவ்­வா­றான ஒரு நோக்கத்தின் ஆரம்­பத்­தைத்தான் பௌத்த பேரினவா­தத்தை ஆதரிக்கும் நந்­த­சே­னவின் பாது­காப்பு அமைச்சின் இஸ்­லா­மிய நூல்க­ளுக்­கான தடை­யிலும் காண்­கிறோம். இதை எதிர்த்து முஸ்லிம் தலை­மைத்­துவம் போரா­டா­விட்டால் அது படிப்படியாக வளர்ந்து வாரந்­தோறும் நடை­பெறும் வெள்­ளிக்­கி­ழமை குத்பா பிரசங்கங்களையும் பாதிக்­கலாம்.

இந்தப் பிரச்­சி­னைக்கு அர­சாங்­கத்தை மட்டும் குறை­கூற முடி­யாது. முஸ்லிம் தலை­மைத்­து­வத்­துக்கும் இதிலே பங்­குண்டு. கடந்த நாற்பது வரு­டங்­க­ளாக முஸ்லிம் சமூ­கத்தில் ஏற்­பட்­டு­வந்த சமய, கலா­சார ரீதி­யான மாற்­றங்­களைச் சீர்­தூக்­கிப்­பார்த்து, அவை இலங்கையின் பல்­லின மக்­களின் சௌஜன்ய உற­வுக்குச் சாதகமான­வையா பாத­க­மா­ன­வையா என்­பதை ஆராய்ந்து, சாதகமா­ன­வற்றை வளர்த்து பாத­க­மா­ன­வற்றை அகற்றி ஒரு­வித சமூக சீர்­தி­ருத்­தத்தை எந்த முஸ்லிம் தலை­வ­னுமே மேற்கொண்டதற்கு ஆதா­ர­மில்லை. 

அவ்­வா­றான ஒரு சீர்­தி­ருத்தம் அவ­சியம் தேவை என்­பதை வலியுறுத்தி­ய­வர்­க­ளையும் பகி­ரங்­க­மா­கவே கண்­டித்த தலைவர்களும் உண்டு. அதே நேரம் அப்­போது ஏற்­பட்­டு­ வந்த மாற்றங்­களை அர­சியல் லாபம் கருதி அணைத்­த­வர்­களே முஸ்லிம் தலை­வர்கள்.

அல்­லாஹ்­வையும், நபி­க­ளா­ரையும், குர்­ஆ­னையும், ஹதீ­தையும், அரசியல் மேடை­க­ளுக்கு இழுத்துத் தேர்தல் வாக்கு வேட்டையாடியவர்­களே இத்­த­லை­வர்கள். 

அன்று அவர்கள் சமூ­கத்­தைக் ­கொண்டு சுமு­க­மாகச் செய்­தி­ருக்க வேண்­டிய சீர்­தி­ருத்­தங்­களை மற்­ற­வர்கள் இன்று வெளியே இருந்து அவர்கள் விரும்­பி­ய­வாறு திணிக்கச் செய்­துள்­ளார்கள். அவ்­வா­றான ஒரு திணிப்­பைத்தான் இஸ்­லா­மிய நூல்­களின் நுழை­விலே காண்கிறோம். 

இந்தத் திணிப்­பு­களை முளை­யி­லேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லா­விட்டால் அவை ஒவ்­வொன்­றாகத் தொடரும். எவ்வாறு இதை எதிர்ப்­பது?

சுதந்­தி­ர­மாக நூல்­களை வாசிப்­ப­தற்கும் சிந்­த­னை­களை எழுத்­திலும் படத்­திலும் வண்­ணத்­திலும் வெளிப்­ப­டுத்­து­வ­தற்கும் ஓர் அர­சாங்கம் தடை­களை விதிக்­கு­மானால் அதன் இர­க­சியம் அர­சாங்கம் விரும்பும் கருத்­துக்­க­ளையும் சிந்­த­னை­யையும் மட்­டுமே மக்கள் வளர்க்க வேண்டும் என அது விரும்­பு­வ­தா­னே­லேயே. இது ஜன­நா­ய­கத்தை ஒழித்து ஏதேச்­ச­தி­கா­ரத்­தையே உரு­வாக்கும். அந்தப் பாதை­யி­லேயே இன்­றைய அரசு செல்கின்றது. இதனை ஜனநாயக சுதந்திரத்தை விரும்பும் எந்த ஒரு பிரஜையும் ஏற்கமாட்டான்.

எனவே முஸ்லிம்கள் இஸ்லாமிய நூல்களின் நுழைவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ஜனநாயகத்துக்கு விதிக்கப்பட்ட தடையாகக் கொண்டு ஜனநாயகத்துக்காகக் குரல் எழுப்பும் ஏனைய பிரஜைகளுடன் இணைந்தே போராட வேண்டும். அது ஜனநாயகத்தின் விடுதலைப் போராட்டமாக, தேசியப் போராட்டமாக உருவெடுக்க வேண்டும். முஸ்லிம் என்ற அடையாளத்தை முன்னெடுக்காமல் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் பிரஜைகள் என்ற கோதாவில் அந்தப் போராட்டம் தொடரவேண்டும்.

அது­மட்­டு­மல்ல, இஸ்­லா­மிய நூல்­களை மட்டும் தடை­ செய்­வது அரசியல் சட்­டத்­துக்கு முர­ணா­னது. இதற்­கெ­தி­ராக அரசாங்கத்தின்மேல் வழக்குத் தொட­ரலாம். இன்று நிலவும் ஐ.நா. மனித உரி­மைகள் சபையின் அழுத்­தங்­க­ளுக்கு மத்­தியில் இந்த வழக்கு அர­சுக்கு மேலும் பல தலை­யி­டி­களைக் கொடுக்­கலாம். முஸ்லிம் சட்­ட­வல்­லு­னர்கள் இது பற்றிச் சிந்­திப்­பார்­களா? இந்தத் தடை ­பற்றி முஸ்லிம் நீதி அமைச்­சரின் நிலைப்பாடு என்ன? வெளிப்படுத்துவாரா?

கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
Vidivelli

No comments:

Post a Comment