மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தில் மிதந்த பெண்ணின் சடலம் கொலை என உறுதி : கைரேகை அடையாளப் பரிவினரை கண்டு வீட்டை விட்டு ஓடிய கணவன் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 30, 2021

மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தில் மிதந்த பெண்ணின் சடலம் கொலை என உறுதி : கைரேகை அடையாளப் பரிவினரை கண்டு வீட்டை விட்டு ஓடிய கணவன் கைது

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த் தேக்கத்திலிருந்து அண்மையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளதாக விசார​ணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் 25ஆம் திகதி மேல் கொத்மலை நீர்த் தேக்கத்திலிருந்து தலவாக்கலை பொலிஸாரினால் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இக்கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக அவருடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண் அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிடன் தோட்டத்தைச் சேர்ந்த வனராஜா சித்தரவள்ளி என்ற 28 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாய் என தெரியவந்துள்ளது.

மேல்கொத்மலை நீர்த் தேக்கத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டதை தொடர்ந்து ஆரம்ப கட்ட விசாரணைகளை தலவாக்கலை மற்றும் அக்கரபத்தனை பொலிஸார் பல்வேறு கோணங்களில் முன்னெடுத்திருந்தனர். 

இந்நிலையில் கைரேகை அடையாளப் பரிவினர் விசாரணை மேற்கொள்வதற்காக வீட்டுக்கு சென்றுள்ளனர். இதன்போது சந்தேக நபரான கணவர் வீட்டை விட்டு ஓடியுள்ளார். அதனை தொடர்ந்து கணவன் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் நேற்று அவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதற்கமைய அவர் வழங்கிய வாக்குமூலத்தில் நான் கூலிக்கு வாகன சாரதியாக தொழில் செய்பவர். கடந்த 23ஆம் திகதி வேலை முடிந்து இரவு வீட்டுக்கு சென்றேன். எனது மனைவிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருந்தது. இதனால் இருவரும் சண்டை போட்டுக் கொண்டோம். நான் அவரை தாக்கினேன். அவர் இறந்துவிட்டார்.

அதனை தொடர்ந்து மனைவியை வீட்டில் வைத்து பூட்டி விட்டு இரண்டு பிள்ளைகளையும் எனது தாயிடம் ஒப்படைத்து விட்டு, இரவு 11 மணியளவில் மனைவியின் சடலத்தினை ஏற்றிக் கொண்டு மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தில் போட்டேன்.

நான் கொலை செய்ய வேண்டும் என்று தாக்கவில்லை. இது தற்செயலாக நடந்தது என சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையிலும் தாக்குதல் காரணமாக இறந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹற்றன் விசேட நிருபர்

No comments:

Post a Comment