ஜெனீவா தொடரை நடத்துபவர்கள் நீதி வழங்கும் அதிகாரங்களை கொண்டவர்கள் அல்ல. ஆனால் அந்த அரங்கில் பரிமாறப்படும் கருத்துகள் சர்வதேச நாடுகளால் மிகவும் உன்னிப்பாக உள்வாங்கப்படும். வல்லாதிக்க நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நாடுகள் மற்றும் நடுநிலைமை நாடுகள் என பல கூறுகளாக பிரிந்து கிடக்கும் சர்வதேசம் தனித்துவமாக ஒரு முடிவை உடனடியாக எடுக்க முடியாது. எதை எடுத்தாலும் ஏட்டிக்குப் போட்டியாக காய்நகர்த்தல்கள் இடம்பெறும் சூழ்நிலை உள்ளதால் உடனடியாக எந்த மாற்றத்தையும் காண முடியாது என்ற நிலைமையே காணப்படும். எனினும் இம்முறை அமர்வில் சிறுபான்மையினரின் கைகள் சற்று ஓங்கக் கூடிய சூழல் தென்படுவதை உணரமுடிகின்றது.
இவ்வாறு ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக பொருளாளரும், மூத்த முஸ்லிம் அரசியல்வாதியுமான எம்.ரி.ஹசன் அலி அளித்த நேர்காணலின் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
கே: அண்மையில் அரசியல் அரங்கில் வெகுவாக பேசப்பட்ட பொத்துவில் - பொலிகண்டி பேரணி பற்றி என்ன கூறுகின்றீர்கள்?
பதில்: அண்மைக் காலமாக சிறுபான்மை அரசியல் வரலாற்றில் நாம் கண்ட மிகப் பெரிய சாதனை இதுவாகும். 'தமிழ் பேசும் மக்கள்' என்ற ஒரு புதிய அடையாளம் நமது வடக்கு, கிழக்கு அரசியலில் பதியப்பட வேண்டிய தேவையை இந்த ஊர்வல உணர்வு வெளிப்படுத்தியுள்ளது. 'அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு' என்ற பதத்திற்கு உயிர் ஊட்ட வேண்டிய ஒரு தேவைப்பாடு உணரப்படுகின்றது.
கே: முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக உறுப்பினரான நீங்கள் பிரிந்து வந்து சாதித்தது என்ன?
பதில்: இந்தக் கேள்விக்கு இரண்டொரு வரிகளில் விளக்கம் சொல்ல முடியாது. எனது அரசியல் பயணம் இன்றும் மரணித்த தலைவர் அஷ்ரப் அவர்களின் அந்த முஸ்லிம் காங்கிரஸின் பாதையில்தான் சென்று கொண்டிருக்கின்றது. அவர் மரணிக்கும் போது அமுலில் இருந்த முஸ்லிம் காங்கிரஸின் யாப்பைக் கொண்டதாகத்தான் இன்றைய கட்சி உள்ளது. அஷ்ரப் காலத்தில் அடிக்கடி நடந்த தமிழ்த் தலைவர்களுடனான கலந்துரையாடல்கள் எமது கட்சியுடனும் தொடர வேண்டும் என்பது எனது அவா. அதற்கான எனது வேண்டுகோளை அறிக்கைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளேன். சில முன்னணி தமிழ்த் தலைவர்களுடன் நேரடியாகவும் உரையாடியுள்ளேன். காலம்தான் இன்னும் கனியவில்லை.
வடகிழக்கு தமிழ் பேசும் மக்கள் ஒருகை ஓசையாக மௌனித்து பயணிக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எமது புரிந்துணர்வுப் பயணம் 21 வருடங்களுக்கு முன்னர் தளர்ந்து போய் விட்டதாக நான் உணர்கின்றேன்.
கே: புதிய தமிழர் ஐக்கிய பேரவை உருவாக்கம் தொடர்பாக தங்களின் கருத்து என்ன?
பதில்: அது காலத்தின் தேவை. இனிவரும் தேர்தல்களில் இந்தப் பேரவை தன் கவனத்தை செலுத்த வேண்டும். தமிழ் பேசும் மக்களின் பேரவையாக அது பரிணமித்தால் நன்று. அதற்கான ஆரம்ப பேச்சுவார்த்தைகளை முஸ்லிம் கட்சிகளுடன் செய்தல் இன்னும் நன்று.
கே: தமிழ், முஸ்லிம் உறவு விரிசலுக்கு காரணமாக அமைந்தது எது? அந்த உறவை மீள்கட்டியெழுப்ப முடியாதா?
பதில்: தமிழ், முஸ்லிம் தலைவர்களின் போக்குகள்தான் காரணம். இருதரப்பும் இதனை நட்புடன் அலசி ஆராய வேண்டும். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் விமிர்சித்து பலவாறாக கட்டுரைகளாக வெளிப்படுத்திக் கொண்டு வருவதனை நான் வாசித்து வேதனைப்படுவதுண்டு.
செம்மொழியான தமிழ்மொழியை தாய்மொழியாக பகிர்ந்து கொண்டு தமிழில் பாண்டியத்தியம் பெற்றுள்ள இரு சமூகங்களும் பெற்றுக் கொண்டுள்ள அந்த அந்த பெருமிதம் ஏன் நமது உறவுப் பாலமாக ஏற்றுக் கொள்ளப்படக் கூடாது? என்னைப் பொறுத்த வரையில் இந்த இரண்டு சமூகங்களுக்கிடையில் போடப்பட்டிருக்கும் வேலியானது வெறும் நூல்வேலிதான். நாம் நினைத்தால் அதனை ஊதியே கலைத்து விடலாம்.
நிச்சயமாக அந்த உறவை மீளக்கட்டியெழுப்பியே ஆக வேண்டும். அது காலத்தின் தேவையும் கூட. விரிசலை ஏற்படுத்திய அரசியல்வாதிகளே இதற்கும் வழிகோல வேண்டும். இரு சமூகங்களும் ஒன்றுபட்டாலன்றி நமது உரிமைகளை பெற முடியாது. அதுமட்டுமல்ல வடக்கு, கிழக்கில் இரு சமூகங்களும் நிம்மதியாக வாழ்வதும் சிரமம்.
நேர்காணல்:
வி.ரி. சகாதேவராஜா - காரைதீவு நிருபர்
No comments:
Post a Comment