யார் என்ன சொன்னாலும் சட்டம் சரிவர நிறைவேற்றப்பட்டு தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆளும் தரப்பில் சிலர் தமது நிலைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை பணிகளை பார்வையிடச் சென்ற அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை தொடர்பாக கருத்துக் கூறினார்.
மேலும்கூறிய அவர், மத்திய அதிவேக பாதை தொடர்பில் கவலைக்கிடமான நிலைமையே காணப்பட்டது. கடந்த அரசாங்கத்தின் பிரபல அமைச்சரொருவர் இந்த நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை அமைப்பதற்காக ஒப்பந்தத்தை பெற்றிருந்தார். அந்தப் பகுதியை அமைக்கும் நடவடிக்கை தற்போது தாமதமடைந்துள்ளது.
பல சந்தர்ப்பங்களில் நாம் அந்த நிறுவனத்துக்கு பாதையை வெகுவிரைவில் பூர்த்தி செய்யுமாறு எச்சரிக்கையும் விடுத்தோம். அவர்களுக்கு தேவையான பணத்தைக்கூட தாமதமின்றி வழங்கினோம். ஆனால் அவர்களால் குறிப்பிட்ட தினத்தில் அதனை பூர்த்தி செய்ய முடியாதென்பது எமது கண்காணிப்பு விஜயத்தின்போது தெரியவந்துள்ளது.
மீரிகமவிலிருந்து பொத்துஹர வரையிலான பாதை அமைக்கும் நடவடிக்கை உள்ளூர் ஒப்பந்தக் காரர்களால் மேற்கொள்ளப்பட்டது. பாதை அமைக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமா இல்லையா என்பதை அந்த குறிப்பிட்ட நிறுவனம் செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் தீர்மானிக்க வேண்டும்.
அவ்வாறில்லாவிட்டால் தமது பாதையை அமைக்கும் பணியை பூர்த்தி செய்து வரும் வேறு ஒப்பந்தக்காரர்களிடம் அதனை ஒப்படைத்துவிட்டு ஒதுங்க வேண்டும். இல்லாவிட்டால் தங்களது நிர்மாண நடவடிக்கயை பூர்த்தி செய்துவரும் நிறுவனங்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும்.
முன்னாள் அமைச்சரின் ஒப்பந்த நிறுவனத்துக்குரிய பகுதியில்தான் பிரச்சினையுள்ளது. நாம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை. ஒன்றரை வருட கால அவகாசமும் வழங்கினோம்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அரசாங்கத்தில் உள்ள பல்வேறு தரப்பினர் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்களே என ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
பல விதமான கருத்துக்களால் எவ்வித நன்மையும் இல்லை. எனக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் உள்ளன. சட்டம் சரியாக செயற்படுத்தப்பட வேண்டும். நீதியை நிலைநாட்டவே இந்நாட்டு மக்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை தெரிவு செய்துள்ளார்கள் என்றார்.
No comments:
Post a Comment